நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகளில் நிரப்பப்படாமல் உள்ள 836 எம்.பி.பி.எஸ். இடங்களையும் தகுதியான மாணவர்களுக்கு வழங்கும் வகையில் கூடுதல் சிறப்புக் கலந்தாய்வு நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 11 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் மருத்துவப் படிப்புக்குத் தகுதி பெற்றிருந்தும், தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் அதிகப்படியான கட்டணங்கள் காரணமாக இறுதிக்கட்ட கலந்தாய்வுக்குப் பிறகும் 836 இடங்கள் காலியாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 14 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மட்டும் 824 எம்.பி.பி.எஸ். இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாகத் தெரிவித்துள்ளார். தனியார் மருத்துவக் கல்வி நிறுவனங்களில் ஆண்டுக் கட்டணம் ரூ.23 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை வசூலிக்கப்படுவதால், முழுப் படிப்பையும் முடிக்க ரூ.1.5 கோடி வரை செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதிக மதிப்பெண்கள் பெற்ற ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் கட்டணம் செலுத்த முடியாமல் மருத்துவக் கல்வி வாய்ப்பை இழக்கின்றனர் என்றும், அதே நேரத்தில் குறைந்த மதிப்பெண்கள் பெற்ற வசதி படைத்த மாணவர்களுக்கு இடங்கள் கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளதாகவும் விமர்சித்துள்ளார். மேலும், காலியாக உள்ள 836 இடங்களும் சுயநிதிப் பிரிவைச் சேர்ந்தவை என்றும், அவை என்.ஆர்.ஐ. அல்லது சிறுபான்மையினருக்கான இடங்கள் அல்ல என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். மருத்துவக் கல்வியில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதைத் தடுக்க உரிய கட்டுப்பாடுகளை விதிக்காமல் மத்திய அரசு செயல்படுவதாகக் குற்றம்சாட்டிய மாணிக்கம் தாகூர், பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா தலைமையிலான மத்திய பாஜக அரசு, சாதாரண மாணவர்களின் எதிர்காலத்தைவிட அதிகக் கட்டணம் வசூலிக்கும் கல்வி நிறுவனங்களின் நலனுக்கே முக்கியத்துவம் அளிப்பதாகக் கண்டனம் தெரிவித்துள்ளார். எனவே, மத்திய சுகாதாரத்துறை உடனடியாகத் தலையிட்டு கூடுதல் சிறப்புக் கலந்தாய்வை நடத்த வேண்டும் என்றும், மருத்துவக் கல்விக் கட்டணங்களை முறைப்படுத்தி, தற்போது காலியாக உள்ள இடங்களைத் தகுதியான ஏழை மற்றும் நடுத்தரக் குடும்ப மாணவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.