கோவை அருகே அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், பக்தர்கள் சிரமமின்றி நடந்து செல்லும் வகையில் ரூ.10 கோடி செலவில் படிக்கட்டுகளை மாற்றி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.மருதமலையில் அமைந்துள்ள இந்த கோவில், முருகப்பெருமானின் 7-வது படைவீடு என பக்தர்களால் குறிப்பிடப்படுகிறது. கோவை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இக்கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவிலில், லிப்ட், தங்கும் மண்டபம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதனுடன், மேலும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.மலை உச்சியில் உள்ள சுப்பிரமணிய சுவாமியை தரிசிக்க, அடிவாரத்தில் இருந்து படிக்கட்டு வழியாகவும், வாகனங்கள் செல்லும் மலைப்பாதை வழியாகவும் செல்லலாம். மலைப்பாதையில் வாகன நிறுத்துமிடம் வரை வாகனங்களில் செல்ல முடியும். இருப்பினும் வார விடுமுறை மற்றும் முக்கிய பண்டிகை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பதால், கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களுக்கு மலைப்பாதையில் அனுமதி வழங்கப்படுவதில்லை.இதனால், அந்த நேரங்களில் பக்தர்கள் கோவில் நிர்வாகம் சார்பில் இயக்கப்படும் பேருந்துகள் மூலம் மலைக்கு செல்கின்றனர். அதேசமயம், பலரும் படிக்கட்டு பாதையை பயன்படுத்தி கோவிலுக்கு செல்கின்றனர்.தற்போதுள்ள படிக்கட்டுகள் மிகவும் செங்குத்தாக இருப்பதால், வயதானவர்கள், கர்ப்பிணிகள் உள்ளிட்ட பக்தர்கள் நடந்து செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. இதை கருத்தில் கொண்டு, பழனி கோவிலின் யானைப்பாதையில் அமைக்கப்பட்டுள்ள வசதியைப் போன்றே பக்தர்கள் எளிதாக நடந்து செல்லும் வகையில் மருதமலை கோவில் படிக்கட்டுகளையும் மாற்றி அமைக்க இந்து சமய அறநிலையத்துறை திட்டமிட்டது.இதற்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, படிக்கட்டுகளை புனரமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதுதவிர, கோவிலின் பின்புறத்தில் பக்தர்கள் ஓய்வெடுக்கும் மண்டபம் உள்ளிட்ட பல்வேறு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இந்த வளர்ச்சிப் பணிகளை விரைவாக நிறைவு செய்து பக்தர்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.