மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டம் நிபத் நகராட்சியில் தெரு நாய்களின் தொல்லையைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி யுவசேனா அமைப்பினர் வித்தியாசமான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். நகராட்சி தலைமை அதிகாரியின் அலுவலக அறைக்குள்ளேயே சில தெரு நாய்களை அவிழ்த்து விட்டனர். நிபத் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து, பொதுமக்களுக்கு சிரமம் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உள்ளிட்டோர் சாலைகளில் செல்ல அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், நாய்க்கடியில் பலர் காயமடைந்துள்ளதாகவும் யுவசேனா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அந்த அமைப்பினர் குற்றம்சாட்டினர். இதையடுத்து, நாசிக் மாவட்ட யுவசேனா தலைவர் விக்ரம் ரந்தாவே தலைமையில் அக்கட்சியினர் புதன்கிழமை நிபத் நகராட்சி அலுவலகத்திற்கு சென்றனர். அப்போது சாக்குகளில் கட்டி கொண்டு வந்திருந்த 4 முதல் 5 தெரு நாய்களை, நகராட்சி தலைமை அதிகாரி தீரஜ் பாம்ரேவின் அலுவலக அறைக்குள் அவிழ்த்து விட்டனர். மேலும், அவரது மேசை மீதும் நாய்களை விட்டதாக கூறப்படுகிறது. திடீரென நாய்கள் அலுவலகத்திற்குள் வந்ததால் அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பதற்றமடைந்து அங்குமிங்கும் ஓடினர். தொடர்ந்து, நகராட்சி அதிகாரியின் மேசைக்கு ரூபாய் நோட்டுகளால் செய்யப்பட்ட மாலையை அணிவித்தும் யுவசேனா அமைப்பினர் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இதனால் நகராட்சி அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நிபத் பகுதியில் தெரு நாய்களின் தொல்லையைக் கட்டுப்படுத்தவும், நாய்களுக்கு கருத்தடை செய்யும் பணிகளை தீவிரப்படுத்தவும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி தலைமை அதிகாரி தீரஜ் பாம்ரே உறுதியளித்தார். இதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். நகராட்சி அலுவலகத்திற்குள் தெரு நாய்களை அவிழ்த்து விட்டு நடத்தப்பட்ட இந்த நூதன போராட்டத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.