தமிழகத்தில் உணவு, சிப்ஸ் உள்ளிட்ட ஸ்நாக்ஸ் தயாரிப்பு மட்டுமின்றி, ஸ்டார்ச் மாவு மற்றும் ஜவ்வரிசி உற்பத்தியிலும் மரவள்ளி கிழங்கு முக்கியப் பொருளாக பயன்படுத்தப்படுகிறது. தற்போது இதன் விலை உயர்ந்து, ஒரு டன் ரூ.15,500 வரை விற்பனையாகி வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் தொடங்கி மூன்று மாதங்கள் மரவள்ளி கிழங்கு அறுவடை சீசனாக உள்ளது. கடந்த ஆண்டும், நடப்பு ஆண்டும் போதிய மழை இல்லாததால் மரவள்ளி கிழங்கு உற்பத்தி மற்றும் வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக விலை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தமிழ்நாடு சிறு, குறு விவசாயிகள் சங்க தலைவர் சுதந்திரராசு கூறியதாவது: கடந்த ஜனவரி மாதத்தில் ஒரு டன் மரவள்ளி கிழங்கு ரூ.8,000 முதல் ரூ.9,000 வரை விற்பனையானது. அறுவடை சீசனில் வரத்து அதிகமாக இருந்ததால் விலை குறைவாகவும், சீராகவும் காணப்பட்டது. தற்போது அறுவடை அளவு குறைந்துள்ளதால், ஆலைகளுக்கு ஒரு டன் ரூ.15,500க்கு வாங்கிச் செல்கின்றனர். கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் தற்போது ஒரு டன்னுக்கு ரூ.500 முதல் ரூ.800 வரை விலை அதிகரித்துள்ளது. உணவு மற்றும் சிப்ஸ் உள்ளிட்ட பயன்பாடுகளுக்காக ஒரு டன் ரூ.18,000 முதல் ரூ.20,000 வரை வாங்கப்படுகிறது. தற்போது மரவள்ளி கிழங்குக்கு நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகளுக்கு லாபம் கிடைத்து வருகிறது. இருப்பினும், சந்தைக்கு வரும் வரத்து தொடர்ந்து குறைவாகவே உள்ளது.