கரூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர மரத்தில் மோதி ஏற்பட்ட விபத்தில், என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் மற்றும் மாணவி உயிரிழந்தனர். மேலும் 3 மாணவிகள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கவுதம் (21). இவர் கரூர் மாவட்டத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று கவுதம், அதே கல்லூரியில் படிக்கும் மோகனூர் பகுதியைச் சேர்ந்த மதுப்பிரியா, காமினி, அனுசுயா, தேவதர்ஷினி ஆகியோருடன் காரில் கரூர் நோக்கி சென்றுகொண்டிருந்தார். காரை கவுதம் ஓட்டிச் சென்றார். கரூர் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பள்ளி அருகே கார் சென்றபோது, திடீரென கவுதமின் கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தாறுமாறாக சென்ற கார் சாலையோரம் இருந்த மரத்தில் வேகமாக மோதியது. விபத்தில் காரின் முன்பகுதி கடுமையாக சேதமடைந்தது. இதில் படுகாயமடைந்த கவுதம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காரில் இருந்த மாணவிகளும் பலத்த காயங்களுக்கு உள்ளாகினர். விபத்தை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டு, காயமடைந்த மாணவிகளை மீட்டனர். பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக கரூரில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் மதுப்பிரியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். காமினி, அனுசுயா, தேவதர்ஷினி ஆகிய 3 மாணவிகளும் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து தகவல் அறிந்த வாங்கல் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், கார் கட்டுப்பாட்டை இழந்ததற்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மரத்தில் கார் மோதி என்ஜினீயரிங் மாணவர் மற்றும் மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.