மயிலாடுதுறையில் புதிய எண்ணெய் கிணறுகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது: திருமாவளவன்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
22 Sep 2026, செவ்வாய் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 22 Sep 2026, Tuesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

மயிலாடுதுறையில் புதிய எண்ணெய் கிணறுகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது: திருமாவளவன்

மயிலாடுதுறையில் புதிய எண்ணெய் கிணறுகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது: திருமாவளவன்

மயிலாடுதுறை பகுதியில் புதிதாக எண்ணெய் கிணறுகள் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது என்றும், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் இதுபோன்ற திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளிப்பதை தமிழக அரசு தடுக்க வேண்டும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மயிலாடுதுறை கடற்கரையில் இருந்து கடலுக்குள் சுமார் 81 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ள PY-3 எண்ணெய் வயலில் மேலும் 5 எண்ணெய் கிணறுகளை அமைக்க தனியார் நிறுவனமான ஹார்டி எக்ஸ்ப்ளோரேஷன் அண்ட் புரொடக்ஷன், மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்திடம் (MoEF&CC) அண்மையில் சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளது. எண்ணெய் கிணறுகளை அமைப்பதற்கான நில அதிர்வு ஆய்வுகள் (Seismic Survey) கடல்வாழ் மீன்களின் உணர்வு அமைப்பை பாதிக்கக்கூடும். மேலும், கிணறுகளில் இருந்து வெளியேறும் நச்சுக் கழிவுகளாலும் மீன்வளம் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இந்தப் பகுதி கடல் ஆமைகள், பவளப்பாறைகள் மற்றும் மீன்களின் இனப்பெருக்கத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுச்சூழல் உணர்திறன் கொண்ட பகுதியாகவும் உள்ளது. எனவே, இங்கு புதிய கிணறுகளைத் தோண்டுவது கடல் சூழல் பாதுகாப்புக்கு எதிரானது என திருமாவளவன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே செயல்பட்டு வரும் கிணறுகளுக்காக நிலத்தடி நீர் எடுக்கப்படுவதால் மயிலாடுதுறை, குத்தாலம், கதிராமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் நீர்மட்டம் குறைந்து விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், மேலும் புதிய கிணறுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டால் விவசாய மக்கள் பெரும் பாதிப்பை சந்திக்க நேரிடும் என்றும் கூறியுள்ளார். தமிழ்நாட்டின் டெல்டா பகுதியில் சுற்றுச்சூழலுக்கும் மக்களின் வாழ்வாதாரத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய திட்டங்களால் அப்பகுதி மக்கள் தொடர்ந்து சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 1997-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் எண்ணெய் மற்றும் இயற்கை வாயுக் கழகத்தின் (ONGC) கிணறுகளால் கதிராமங்கலம், திருவேள்விக்குடி ஆகிய கிராமங்களில் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எண்ணெய் வளத்தை அதிகரிக்கும் வளர்ச்சித் திட்டம் என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்டாலும், இத்தகைய முயற்சிகள் நிலையான வருமானத்தையும் வாழ்வாதாரத்தையும் வழங்கும் வேளாண்மை மற்றும் மீன்வளத்தை பாதிக்கும் அபாயம் கொண்டவை என திருமாவளவன் தெரிவித்துள்ளார். எனவே, தமிழ்நாட்டில் இத்திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது என்றும், மயிலாடுதுறை மாவட்டம் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்துக்குள் வருவதால் எந்தச் சூழலிலும் இத்திட்டத்துக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்பதை தமிழக அரசு மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களைத் தேடி எடுப்பதற்கான உரிமம் வழங்கும் OALP (Open Acreage Licensing Programme) முறையை மத்திய அரசு கடந்த 2017-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் எண்ணெய் மற்றும் எரிவாயு கிணறுகள் அமைப்பதற்கான பகுதிகளைத் தேர்வு செய்யும் அதிகாரம் எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.எண்ணெய் மற்றும் எரிவாயுவுக்கு தனித்தனி உரிமம் வழங்கும் நடைமுறை மாற்றப்பட்டு, இரண்டுக்கும் ஒரே உரிமம் வழங்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டதுடன், நிறுவனங்களே விலையை நிர்ணயிக்கும் அதிகாரமும் பெற்றுள்ளதாக திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார். எனவே, எண்ணெய் மற்றும் எரிவாயு உரிமம் வழங்குவதில் மாநிலங்களுக்கும் உரிய அதிகாரம் கிடைக்கும் வகையில் OALP நடைமுறை முழுமையாக மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மத்திய அரசை வலியுறுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.