மயிலாடுதுறை மாவட்டம் தேரெழுந்தூர் கிராமத்தில் உள்ள வேதபுரீஸ்வரர் கோவிலில் மத்திய தொல்லியல் துறையின் கல்வெட்டியல் பிரிவினர் அண்மையில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது இதுவரை பதிவு செய்யப்படாத முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்றுக் கல்வெட்டு ஒன்று கண்டறியப்பட்டது. கோவிலின் அர்த்த மண்டபத் தூணில் சோழர் காலத் தமிழ் எழுத்துக்களில் இந்தக் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. சிவபெருமானுக்கு அமுது படைப்பதற்காக பொன் தானமாக வழங்கப்பட்ட விவரங்கள் அதில் இடம்பெற்றுள்ளன.இதுகுறித்து கல்வெட்டியல்பிரிவுஇயக்குநர்முனிரத்தினம்கூறியதாவது:கோவிராஜ கேசரிவர்மனான முதலாம் ராஜராஜ சோழனின் 18-வது ஆட்சியாண்டான கி.பி. 1003-ல் இந்தக் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. உய்யக்கொண்டார் வளநாட்டில் அமைந்திருந்த பிரம்மதேயமான திருவழுந்தூர் மகாசபையில், திருக்கடவுடை நாயனார் தெய்வத்துக்கு அமுது படைப்பதற்காக 21 கழஞ்சு தங்கம் தானமாக வழங்கப்பட்டதாக கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.அவ்வாறு வழங்கப்பட்ட அறக்கொடையின் மூலம் கிடைக்கும் வட்டிப் பணத்தில், அமுது படைப்பதற்குத் தேவையான நெல் உள்ளிட்ட பொருட்களை வாங்க வேண்டும் என்றும் கல்வெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.