இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் மற்றும் நடிகர் மம்முட்டி நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ள ‘பாதயாத்திரா’ திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான மம்முட்டி, தமிழில் **‘மவுனம் சம்மதம்’, ‘அழகன்’, ‘தளபதி’, ‘கிளிப்பேச்சு கேட்கவா’, ‘அரசியல்’, ‘மறுமலர்ச்சி’, ‘ஆனந்தம்’, ‘பேரன்பு’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழிப் படங்களிலும் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்துள்ளார். நடிப்புடன் திரைப்படத் தயாரிப்பிலும் ஈடுபட்டு வரும் மம்முட்டியின் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘பேட்ரியாட்’திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றதுடன், வணிக ரீதியாக வெற்றியடைந்தது. மலையாள சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கிய ‘அனந்தரம்’, ‘மதிலுகள்’, ‘விதேயன்’ ஆகிய படங்களில் மம்முட்டி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், சுமார் 32 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கியுள்ள ‘பாதயாத்திரா’ படத்தில் மம்முட்டி கதாநாயகனாக நடிப்பதுடன், படத்தையும் தயாரித்துள்ளார். இந்திரன்ஸ், கிரேஸ் ஆண்டனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கேரளத்தின் காக்கநாடு பகுதியில் நடைபெற்ற இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்ததாக அண்மையில் அறிவிக்கப்பட்டது. தற்போது வெளியாகியுள்ள டிரெய்லரின் அடிப்படையில், மலைப்பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் மருத்துவராக வசிக்கும் மம்முட்டியின் கதாபாத்திரத்துக்கும், அங்குள்ள மக்களுக்கும் இடையேயான உறவை மையமாகக் கொண்டு படம் உருவாகியிருப்பது தெரியவந்துள்ளது. அடூர் கோபாலகிருஷ்ணன் - மம்முட்டி கூட்டணியில் உருவான திரைப்படங்களுக்கு கேரள ரசிகர்கள் மத்தியில் இதுவரை நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், ‘பாதயாத்திரா’ திரைப்படமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.