மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர்கள் தொடர்பான வழக்கு தள்ளுபடி
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

19 Sep 2026 www.thinathulir.com

மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர்கள் தொடர்பான வழக்கு தள்ளுபடி

மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர்கள் தொடர்பான வழக்கு தள்ளுபடி

மதுரை மீனாட்சி அம்மன் – சுந்தரேசுவரர் கோவிலின் அறங்காவலர் குழுவை அரசியல் தலையீடின்றி வெளிப்படையான முறையில் அமைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை மதுரை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம், எழுமலையைச் சேர்ந்த கீதாலட்சுமி இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அதில், மீனாட்சி அம்மன் கோவிலின் தற்போதைய அறங்காவலர் குழுவில் அரசியல் கட்சிகளுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார். இந்த நியமனங்கள் இந்து சமய அறநிலையத்துறையின் சட்டவிதிகளுக்கு எதிரானவை என்றும், அறங்காவலர்களை அரசியல் கட்சிகளின் விருப்பத்தின் அடிப்படையில் மட்டும் நியமிக்கக் கூடாது என ஏற்கெனவே ஐகோர்ட்டு பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார். எனவே, கோவிலின் அறங்காவலர் குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்களை அரசியல் தலையீடு இல்லாமல், வெளிப்படையான நடைமுறையில் நியமிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தற்போதைய அறங்காவலர் குழுவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டதற்கு எந்தத் தரப்பினரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை எனக் கூறினார். மேலும், அறங்காவலர்களின் பதவிக்காலம் 2028-ம் ஆண்டு ஜனவரியில்தான் நிறைவடைகிறது என்றும், அதன் பின்னரே புதிய அறங்காவலர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார். அரசு தரப்பின் விளக்கத்தைப் பதிவு செய்த நீதிபதிகள், மனுதாரர் அறங்காவலர்களின் பதவிக்கால நீட்டிப்பை எதிர்த்து வழக்கு தொடரவில்லை என்றும், அரசியல் சார்பற்றவர்களை வெளிப்படையான முறையில் நியமிக்க வேண்டும் என்றே கோரியுள்ளார் என்றும் குறிப்பிட்டனர். தற்போதைய அறங்காவலர்களின் பதவிக்காலம் இன்னும் முடிவடையாத நிலையில், இந்த மனு முன்கூட்டியே தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது. எனவே, இப்போதைக்கு மனுவை விசாரிக்க முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.