மத்தியப் பிரதேசத்தில் ரசகுல்லா இனிப்பு என்று தவறாக நினைத்து, காட்டுப்பன்றிகளை வேட்டையாடப் பயன்படுத்தப்படும் நாட்டு வெடிகுண்டைக் கடித்த 35 வயது இளைஞர், வெடிவிபத்தில் படுகாயமடைந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் திண்டோரி மாவட்டம், கோட்வாலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட படாரியா சாந்தா கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திர பரோடியா (35). இவர் கடந்த 8-ம் தேதி தீபாவளி இரவு சுமார் 8 மணியளவில், தனது வீட்டின் முற்றத்தில் நெருப்பு மூட்டி குளிர் காய்ந்து கொண்டிருந்தார். அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த ராம் பகத் பாருடியா என்பவர், ஒரு நாட்டு வெடிகுண்டை ரசகுல்லா எனக் கூறி ராஜேந்திராவிடம் கொடுத்துள்ளார். இரவு நேரம் என்பதால் இருட்டில் அதை இனிப்பு என்று நம்பிய ராஜேந்திரா, வாயில் போட்டு கடித்துள்ளார். அடுத்த நொடியே அந்தப் பொருள் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. காட்டுப்பன்றிகளை வேட்டையாடப் பயன்படுத்தப்படும் சக்திவாய்ந்த வெடிகுண்டு என்பதால், வெடிப்பில் ராஜேந்திராவின் வாய் மற்றும் முகம் பலத்த சேதமடைந்தன. இதையடுத்து அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கோட்வாலி போலீசார், ராஜேந்திராவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ராம் பகத் பாருடியா மீது நான்கு வழக்குகள் பதிவு செய்து, சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.ரசகுல்லா என நினைத்து நாட்டு வெடிகுண்டைக் கடித்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.