மத்திய பிரதேசத்தின் ராஜ்கர் மாவட்டத்தில் கடுமையாக மாசடைந்துள்ள அஜ்நார் நதியை 20 வயது இளைஞர் ஒருவர் தனது சொந்த முயற்சியில் தொடர்ந்து சுத்தப்படுத்தி வருகிறார்.பீட்டு தபாஹி என்ற அந்த இளைஞர், நதியில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் மற்றும் பல்வேறு குப்பைகளை தனது கைகளால் அகற்றி வருகிறார். இதற்காக தனது சொந்தப் பணத்தையும் அவர் செலவிட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் வந்து நதியை சுத்தம் செய்வார்கள் என காத்திருக்காமல், பல மாதங்களாக தனி நபராகவே அவர் மேற்கொண்டு வரும் இந்த பணிக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.அதே நேரத்தில், இளைஞரின் செயல் நகராட்சி நிர்வாகத்தின் மீதான அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. நதியை சுத்தப்படுத்த வேண்டிய பணியை ஒரு இளைஞர் தனியாக மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பது நகராட்சி நிர்வாகத்துக்கு பெரும் அவமானம் என பலரும் சமூக வலைதளங்களில் தங்கள் ஆதங்கத்தை பதிவு செய்து வருகின்றனர்.