மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி 3 சதவீதம் வரை அதிகரிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.பொதுவாக ஹோலி, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளை முன்னிட்டு அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பை மத்திய அரசு 2 முதல் 3 மாதங்கள் தாமதமாக வெளியிடுவது வழக்கம். விதிமுறைகளின்படி, அகவிலைப்படி 50 சதவீதத்தை தாண்டினால், அந்த தொகையை அடிப்படை சம்பளம் மற்றும் ஓய்வூதியத்துடன் இணைக்க வேண்டும். கடந்த 2024-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியே அகவிலைப்படி 50 சதவீதத்தை எட்டியது. இருப்பினும், அது அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப்படவில்லை. இதுகுறித்து மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களின் கூட்டமைப்பு சார்பில் மத்திய அமைச்சரவை செயலருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால் அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படாது என மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி நாடாளுமன்றத்தில் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.இந்த நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த முறை அகவிலைப்படி 3 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த உயர்வால் சுமார் 49 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 69 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள் என கூறப்படுகிறது.மத்திய அமைச்சரவை விரைவில் கூட உள்ள நிலையில், அகவிலைப்படி உயர்வுக்கு ஒப்புதல் கிடைத்ததும், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் கணக்கிட்டு நிலுவைத் தொகையுடன் நிதிப் பலன்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.தற்போது 60 சதவீதமாக உள்ள அகவிலைப்படி, 3 சதவீத உயர்வுக்குப் பிறகு 63 சதவீதமாக அதிகரிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.