மதுரையில் ரவுடி சூர்யா முகம் சிதைக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மதுரை சமயநல்லூர் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய கட்டிடத்தில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக சமயநல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உயிரிழந்தவரின் அடையாளம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, கொலை செய்யப்பட்டவர் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய சூர்யா (26) என்பது தெரியவந்தது. தொடர்ந்து, அவரை கொலை செய்தவர்கள் யார், சம்பவத்திற்கான பின்னணி என்ன என்பது குறித்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். விசாரணையில், ஞாயிற்றுக்கிழமை இரவு சூர்யா தனது நண்பர்களுடன் மது அருந்தியபோது தகராறு ஏற்பட்டதாக தெரியவந்தது. அஸ்வின் என்பவருடன் ஏற்பட்ட மோதல் முற்றிய நிலையில், அஸ்வின் உள்ளிட்ட 5 பேர் சேர்ந்து சூர்யாவை கடுமையாக தாக்கி கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்திய தனிப்படை போலீசார், கொலை வழக்கில் தொடர்புடைய அஜய், விஷ்ணு, செல்வக்குமார், அஸ்வின் மற்றும் சந்துரு ஆகிய 5 பேரையும் சம்பவம் நடந்த 12 மணி நேரத்திற்குள் கைது செய்தனர். நண்பர்களுடன் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.