தமிழகத்தில் மின் பற்றாக்குறை இல்லை என மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் தொடர்ந்து தெரிவித்து வருகிறார். அதேநேரம், பல்வேறு பகுதிகளில் அறிவிப்பின்றி மின்தடை ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், மதுரையில் உள்ள சட்டக்கல்லூரியில் இன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் சில விநாடிகள் மின்சாரம் தடைபட்டது. விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா பேசிக்கொண்டிருந்தபோது இந்த மின்தடை ஏற்பட்டதால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் சில விநாடிகளிலேயே மின்சாரம் மீண்டும் வந்ததால் விழா தொடர்ந்து நடைபெற்றது. மின்சாரத்துறை அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியிலேயே மின்தடை ஏற்பட்டதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், இதுகுறித்து அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், நிகழ்ச்சி நடைபெற்ற இடத்திற்கு ஜெனரேட்டர் மூலமாகவே மின்சாரம் வழங்கப்பட்டதாகவும், ஒரு ஜெனரேட்டரில் இருந்து மற்றொரு ஜெனரேட்டருக்கு மின்சாரம் மாற்றப்பட்டபோது சுமார் 5 விநாடிகள் மட்டும் மின்தடை ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.