நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கவுள்ள புதிய படத்தின் பூஜை, சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே உள்ள மாரநாடு கருப்புசாமி கோவிலில் நடைபெற உள்ளது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள ‘ஓம்’ படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இதனைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கும் புதிய படத்திலும் தனுஷ் நடிக்க உள்ளார். இதற்கிடையே, தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் உருவாகும் புதிய படத்திலும் தனுஷ் ஒப்பந்தமாகியுள்ளார். தனுஷின் 56-வது படமாக உருவாகும் இப்படத்தின் பூஜை நிகழ்வில் பங்கேற்பதற்காக அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். மதுரை விமான நிலையத்தில் தனுஷுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவருக்கு மாலை அணிவித்த ரசிகர்கள், வேல் மற்றும் மலர்க்கொத்தையும் வழங்கினர். ரசிகர்களின் அன்பை ஏற்றுக்கொண்ட தனுஷ், காரின் சன்ரூப் வழியாக நின்றபடி கையசைத்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இந்த பூஜையில் தனுஷுடன் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவும் பங்கேற்க வந்துள்ளார். புதிய படத்தின் பூஜையை முன்னிட்டு மாரநாடு கருப்புசாமி கோவிலில் 18 அடி உயர அருவாள் காணிக்கையாக செலுத்தப்பட உள்ளது. மேலும், ரசிகர்களுக்காக 16 கிடாக்கள் வெட்டி விருந்து வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் தனுஷின் புதிய பட பூஜை நிகழ்வை எதிர்நோக்கி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.