மதுரைக்கு ரூ.4,899... கோவைக்கு ரூ.6,154! ஆம்னி பஸ் கட்டணக் கொள்ளைக்கு அன்புமணி கண்டனம்
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

10 Sep 2026 www.thinathulir.com

மதுரைக்கு ரூ.4,899... கோவைக்கு ரூ.6,154! ஆம்னி பஸ் கட்டணக் கொள்ளைக்கு அன்புமணி கண்டனம்

மதுரைக்கு ரூ.4,899... கோவைக்கு ரூ.6,154! ஆம்னி பஸ் கட்டணக் கொள்ளைக்கு அன்புமணி கண்டனம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தொடர் விடுமுறை வரவுள்ள நிலையில், சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளிடம் தனியார் ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். வரும் 14-ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. அதற்கு முன்பாக சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்களும் விடுமுறை என்பதால், தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. இதனால் சென்னையில் வசிக்கும் வெளியூர் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளனர். இந்தச் சூழலைப் பயன்படுத்தி தனியார் ஆம்னி பேருந்துகளில் வழக்கத்தை விட பல மடங்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அன்புமணி தெரிவித்துள்ளார். செப்டம்பர் 11-ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு சென்னையில் இருந்து புறப்படும் பேருந்துகளில் திருச்சிக்கு அதிகபட்சமாக ரூ.3,999, மதுரைக்கு ரூ.4,000, கோவைக்கு ரூ.6,154 வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதேபோல், செப்டம்பர் 14-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னைக்குத் திரும்பும் பயணங்களுக்கு திருச்சியில் இருந்து ரூ.4,499, மதுரையில் இருந்து ரூ.4,899, கோவையில் இருந்து ரூ.4,799 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். சென்னையில் இருந்து 300 கி.மீ.க்கும் குறைவான தொலைவில் உள்ள கும்பகோணத்துக்குச் செல்ல ரூ.3,179 வரையிலும், கும்பகோணத்தில் இருந்து சென்னைக்குத் திரும்ப ரூ.3,419 வரையிலும் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் அன்புமணி தெரிவித்துள்ளார். இந்தக் கட்டணத்தில் நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பம் திருச்சிக்குச் சென்று மீண்டும் சென்னை திரும்பினால், பேருந்து பயணத்துக்கு மட்டும் சுமார் ரூ.34 ஆயிரம் வரை செலவாகும் என்றும் அவர் கூறியுள்ளார். சொந்த ஊர்களுக்குச் செல்ல விரும்பும் மக்களில் 90 சதவீதத்துக்கும் அதிகமானோரின் ஒரு மாத ஊதியத்தைவிட இந்தத் தொகை அதிகமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆம்னி பேருந்து நிறுவனங்கள் இந்தக் கட்டணங்களை மறைத்து வசூலிக்கவில்லை என்றும், ஆன்லைன் முன்பதிவு தளங்களிலேயே கட்டண விவரங்கள் வெளியிடப்பட்டு முன்பதிவுகள் நடைபெற்று வருவதாகவும் அன்புமணி குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், தமிழக அரசு இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் குற்றம்சாட்டியுள்ளார். திமுக ஆட்சியின் ஐந்து ஆண்டுகளிலும் தனியார் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதாகவும், அப்போது பாமக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தபோது, குறைந்தபட்சம் நடவடிக்கை எடுப்பது போன்ற முயற்சிகளை அரசு மேற்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது அதுபோன்ற நடவடிக்கைகள்கூட மேற்கொள்ளப்படவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும், முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் வசூலிக்கப்பட்ட கட்டணத்தைவிட தற்போது 20 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக அன்புமணி தெரிவித்துள்ளார். தனியார் ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை கட்டுப்படுத்தவும், அதற்காக கட்டண நிர்ணயக் குழுவை அமைக்கவும் சென்னை உயர் நீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த காலங்களில் அந்த உத்தரவுகள் முறையாக நடைமுறைப்படுத்தப்படாத நிலையில், தற்போதைய ஆட்சியிலும் அதே நிலை நீடிப்பது கவலைக்குரியது என தெரிவித்துள்ளார். எனவே, தமிழக அரசு இனியாவது நடவடிக்கை எடுத்து தனியார் ஆம்னி பேருந்துகளில் வசூலிக்கப்படும் அதிகப்படியான கட்டணத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.