மதுரையில் முதல்-அமைச்சர் விஜய் இன்று பங்கேற்க உள்ள நிகழ்ச்சிகளின் விவரங்கள் வெளியாகியுள்ளன. தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக, இன்று காலை 9.30 மணியளவில் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் புறப்படும் முதல்-அமைச்சர் விஜய், காலை 11 மணிக்கு மதுரை விமான நிலையத்தை வந்தடைகிறார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விமான நிலையத்தில் இருந்து திறந்தவெளி வாகனத்தில் நின்றபடி அவர் பயணம் மேற்கொள்கிறார். இந்த சாலைப் பயணம் பெருங்குடி, மண்டேலா நகர், சிந்தாமணி, ரிங்ரோடு சுற்றுச்சாலை, கருப்பாயூரணி வழியாக நடைபெற உள்ளது. இதையொட்டி, சாலையின் இருபுறங்களிலும் இரும்புத் தடுப்புகள் மற்றும் சவுக்கு கம்புகள் அமைக்கப்பட்டு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து மதியம் 12 மணியளவில் மதுரை அரசு மருத்துவமனைக்கு விஜய் செல்கிறார். அங்குள்ள கருத்தரங்கக் கூடத்தில் குத்துவிளக்கேற்றி தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். விழாவில், மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிறந்த 25 குழந்தைகளுக்கு தனது கைகளால் தங்க மோதிரங்களை வழங்குகிறார். பின்னர் மதுரை அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள பிரசவ வார்டுக்குச் சென்று, அங்கு பிறந்த 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை அணிவிக்கிறார். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கர்ப்பிணிகள் மற்றும் தாய்மார்களை சந்தித்து நலம் விசாரிக்கிறார். முதல்-அமைச்சரின் கைகளால் தங்க மோதிரம் பெற உள்ள குழந்தைகள் குறித்த தகவல், சம்பந்தப்பட்ட குழந்தைகளின் பெற்றோருக்கு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தல் நடைபெற உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகள் இடம்பெறும் செங்கல்பட்டு, திருப்பூர் மாவட்டங்களைத் தவிர்த்து, மற்ற அனைத்து பகுதிகளிலும் இந்தத் திட்டம் இன்று முதல் தொடங்கப்பட உள்ளது. விழாவை முன்னிட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனைத்து ஏற்பாடுகளும் நேற்று இரவே நிறைவு செய்யப்பட்டன. முதல்-அமைச்சரின் வருகையையொட்டி மருத்துவமனை கட்டிடங்கள் பல்வேறு வண்ணங்களில் புதிதாக வர்ணம் பூசப்பட்டு புதுப்பொலிவுடன் காணப்படுகின்றன. கருத்தரங்கக் கூடமும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. விழா முடிந்ததும் புதுப்பிக்கப்பட்ட காந்தி அருங்காட்சியகத்தை விஜய் திறந்து வைத்து பார்வையிடுகிறார். பின்னர் அரசு விருந்தினர் மாளிகைக்குச் சென்று சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். அதன்பிறகு உள்ளூர் அமைச்சர்கள், த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். மாலை 4.30 மணிக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்யும் அவர், அதன்பின்னர் சென்னைக்கு புறப்பட்டுச் செல்கிறார்.