மதுரை: மாணவர் மரணத்தில் நீதி கேட்டு போராடியவர்கள் குண்டுக்கட்டாக கைது
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

18 Sep 2026 www.thinathulir.com

மதுரை: மாணவர் மரணத்தில் நீதி கேட்டு போராடியவர்கள் குண்டுக்கட்டாக கைது

மதுரை: மாணவர் மரணத்தில் நீதி கேட்டு போராடியவர்கள் குண்டுக்கட்டாக கைது

மதுரை ஆனையூர் அருகே வள்ளலார் தெருவைச் சேர்ந்தவர் கருப்பசாமி. காய்கறி வியாபாரம் செய்து வரும் இவரது மனைவி யோகலட்சுமி. இந்த தம்பதியின் 16 வயது மகன் தமிழ்ச்செல்வன், ஆரப்பாளையம் பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். கடந்த 6-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பள்ளிக்கு விடுமுறை என்பதால், நண்பர்களுடன் வெளியே சென்ற தமிழ்ச்செல்வன் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த பெற்றோர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து யோகலட்சுமி கூடல்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவரை தேடி வந்தனர். இந்த நிலையில், கூடல்நகர் பகுதியில் உள்ள அப்துல்கலாம் நகர் கண்மாய் நீரில் தமிழ்ச்செல்வன் உடல் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், நண்பர்களுடன் கண்மாயில் குளிக்கச் சென்றபோது தமிழ்ச்செல்வன் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். சம்பவம் குறித்து வீட்டில் தெரிவித்தால் பிரச்சினை ஏற்படும் என கருதி, அவருடன் சென்ற நண்பர்கள் இதை மறைத்திருக்கலாம் என்றும் விசாரணை நடத்தப்படுகிறது. அதேவேளை, மாணவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனிடையே, தமிழ்ச்செல்வனின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மதுரை அரசு மருத்துவமனை பிணவறை முன்பு திரண்டனர். அப்போது அவர்கள், தமிழ்ச்செல்வன் வேறு சமூகத்தைச் சேர்ந்த மாணவியுடன் காதல் தொடர்பில் பழகி வந்ததாகவும், இதற்கு அந்த மாணவியின் தந்தை எதிர்ப்பு தெரிவித்து அவரை மிரட்டியதாகவும் தெரிவித்தனர். மேலும், ஒருமுறை நண்பர்களுடன் சென்றபோது அந்த நபர் தமிழ்ச்செல்வனின் கையைப் பிடித்து திருகி தாக்கியதாகவும் குடும்பத்தினர் கூறினர். எனவே, அவர்மீது தங்களுக்கு சந்தேகம் இருப்பதாகவும், தனது மகளுடன் பழகிய ஆத்திரத்தில் தமிழ்ச்செல்வனை கடத்தி கொலை செய்திருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் தெரிவித்தனர். இதுதொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சம்பவத்தன்று தமிழ்ச்செல்வனுடன் இருந்த நண்பர்களிடமும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் போலீசில் புகார் அளித்துள்ளனர். போலீசார் உரிய முறையில் விசாரணை நடத்தாவிட்டால் மாணவரின் உடலை பெற்றுக்கொள்ள மாட்டோம் என்றும், பிரேத பரிசோதனை முழுவதையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்றும் மருத்துவமனை நிர்வாகத்திடம் குடும்பத்தினர் வலியுறுத்தினர். மாணவி ஒருவருடன் தமிழ்ச்செல்வன் பழகிய விவகாரம் அவரது மரணத்துக்கு காரணமா என்பது குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சூழலில், தமிழ்ச்செல்வன் மரணத்துக்கு நீதி கோரி SFI, DYFI, AIDWA, TNUF ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் பங்கேற்ற மாணவர் அமைப்பினரை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர். மேலும், சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை கொலை வழக்காக மாற்றி, உரிய முறையில் விசாரணை நடத்த வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். தமிழ்ச்செல்வன் ஆணவப் படுகொலை செய்யப்பட்டதாக அவரது பெற்றோர் குற்றம்சாட்டி வருவதுடன், அவரது உடலை பெற்றுக்கொள்ளவும் மறுத்து வருகின்றனர்.