மதுரை மத்திய சிறையில் கைதிகள் மூலம் தயாரிக்கப்பட்ட தபால் கவர்கள், அட்டைகள் உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்கள் மற்றும் மருத்துவ உதவி பொருட்கள் ஆகியவை அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், நீதிமன்றங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு அனுப்பப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. ஆனால், அந்தப் பணிகளில் ஈடுபட்ட கைதிகளுக்கு ஊதியம் வழங்கியதாக போலியான கணக்குகள் தயாரித்து, சுமார் ரூ.100 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.இந்த விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரி, வழக்கறிஞரும் சிறை கைதிகள் உரிமை மையத்தின் இயக்குனருமான புகழேந்தி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், 2016 முதல் 2021-ம் ஆண்டு வரையிலான அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் இந்த முறைகேடுகள் நடைபெற்றதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, புகாரில் விசாரணைக்கு உரிய முகாந்திரம் இருப்பது தெரியவந்தால், லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று ஐகோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.இந்த நிலையில், மதுரை மத்திய சிறைப் பள்ளியில் உதவியாளராக பணியாற்றிய தனது கணவருக்கு ஊதியம் வழங்கப்படவில்லை எனக் கூறி, சிறைவாசியின் மனைவி கோகிலா மற்றொரு வழக்கை ஐகோர்ட்டில் தொடர்ந்திருந்தார்.இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மதுரை மத்திய சிறையில் போலியான கணக்குகளை உருவாக்கி ரூ.100 கோடி அளவுக்கு ஊழல் செய்ததாக ஏற்கனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் விசாரணை மெதுவாகநடைபெற்றுவருவதாகவும்மனுதாரர்தரப்பில்தெரிவிக்கப்பட்டது.இதற்குபதிலளித்த லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பு, வழக்கில் விரிவான விசாரணையை நிறைவு செய்ய கூடுதல் கால அவகாசம் தேவைப்படுவதாக தெரிவித்தது. மேலும், விசாரணையை விரைந்து முடித்து, சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்வதற்காக சிறப்பு குழு அமைக்கப்படும் என்றும் கூறியது.இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதிகள், மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி தலைமையில் சிறப்பு குழுவை அமைத்து, விசாரணையை முடித்து 4 மாதங்களுக்குள் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டனர்.மேலும், நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படாவிட்டால், இந்த வழக்கின் விசாரணையை வேறு புலனாய்வு அமைப்புக்கு மாற்ற வேண்டிய நிலை ஏற்படும் என நீதிபதிகள் எச்சரித்தனர். முறைகேட்டில் தொடர்புடைய அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளவும் நீதிபதிகள் அனுமதி அளித்து உத்தரவிட்டனர்.