மதுரை மாவட்டம் மேலூர் உட்கோட்டத்துக்கு உட்பட்ட கம்பூர் கிராமத்தில் தூய்மைக் காவலர் அளித்த புகார் தொடர்பான வழக்குகளின் நிலை குறித்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. கம்பூர் கிராமத்தைச் சேர்ந்த தூய்மைக் காவலர் சசிகலா, ஊராட்சி செயலாளர் ரூபா மீது அளித்த புகாரின் அடிப்படையில், கொட்டாம்பட்டி காவல் நிலையத்தில் குற்ற எண் 355/2026-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் காவல்துறையினர் தொடர்ந்து புலன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, சம்பந்தப்பட்ட விவகாரம் தொடர்பாக ஊர் பெரியவர்கள் பேச்சுவார்த்தை நடத்தச் சென்றபோது மிரட்டல் விடுக்கப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரிலும் தனியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கொட்டாம்பட்டி காவல் நிலையத்தில் குற்ற எண் 358/2026-ன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்கும் தற்போது விசாரணையில் உள்ளது. இந்த நிலையில், மேற்கண்ட வழக்குகள் ரத்து செய்யப்பட்டுவிட்டதாகவும், முழுமையாக முடித்து வைக்கப்பட்டதாகவும் சில ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது. ஆனால், இரு வழக்குகளும் ரத்து செய்யப்படவில்லை என்றும், அவற்றில் சட்ட விதிகளுக்கு உட்பட்டு தொடர்ந்து புலன் விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறை தனது விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.