மதுரை காவல் ஆணையர் அலுவலகம் முன் போராடியவர்கள் மீது தாக்குதல் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

15 Sep 2026 www.thinathulir.com

மதுரை காவல் ஆணையர் அலுவலகம் முன் போராடியவர்கள் மீது தாக்குதல் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

மதுரை காவல் ஆணையர் அலுவலகம் முன் போராடியவர்கள் மீது தாக்குதல் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

மதுரை காவல் துறை ஆணையர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் நடத்தியதாக கூறப்படும் தாக்குதலுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மதுரை ஆனையூர் கூடல்புதூர் பகுதியைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவர் தமிழ்ச்செல்வன் கடந்த 7-ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். முட்புதர்கள் நிறைந்த குட்டைப் பகுதியில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. மாணவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், இது கொலையாக இருக்கலாம் என்றும் அவரது உறவினர்கள் தெரிவித்து வருகின்றனர். மாணவர் உயிரிழந்து ஒரு வாரம் கடந்த நிலையிலும், அவரது உடலை தாயார் யோகலட்சுமி பெற்றுக்கொள்ள மறுத்து வருகிறார். தனது மகனின் மரணத்தை கொலை வழக்காக பதிவு செய்து, அதற்கு காரணமானவர்களை கண்டறிந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தி வருகிறார். இந்த விவகாரத்தில் காவல்துறை இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, மாணவரின் உறவினர்கள் மதுரை காவல் துறை ஆணையர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது போராட்டத்தில் பங்கேற்ற பெண்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. மேலும், சாலையில் விழுந்த பெண்ணின் கழுத்தில் பெண் காவலர்கள் காலால் மிதிக்கும் காட்சி வெளியாகி இருப்பதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. காவல்துறையினரின் இந்த நடவடிக்கை அதிர்ச்சியளிப்பதாகவும், மனித உரிமை மீறலில் அதிகாரிகள் ஈடுபடுவது கவலைக்குரியது என்றும் மு. வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மாணவர் தமிழ்ச்செல்வனின் மரணத்தை கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் தமிழக அரசை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தியுள்ளது.