மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கும் வருகிற செவ்வாய்க்கிழமை (6-ந் தேதி) இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. 5 முனை போட்டி நிலவும் நிலையில், வாக்குப்பதிவுக்கு இன்னும் 5 நாட்களே இருப்பதால் இரு தொகுதிகளிலும் வேட்பாளர்களின் தீவிர பிரசாரம் சூடுபிடித்துள்ளது. மதுராந்தகம் தொகுதியில் த.வெ.க. சார்பில் மரகதம் குமரவேல் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து கடந்த 25-ம் தேதி முதல்-அமைச்சர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, இடைத்தேர்தலில் தீய சக்திக்கும் மற்றவர்களுக்கும் மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். இந்த நிலையில், த.வெ.க. வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து முதல்-அமைச்சர் விஜய் நாளை (வெள்ளிக்கிழமை) மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் பிரசாரம் செய்ய உள்ளார். முதலில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலில் விஜய் சாமி தரிசனம் செய்ய உள்ளதாகவும், அதன்பிறகு பங்காரு அடிகளார் நினைவிடத்திற்குச் செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து மதுராந்தகம் தொகுதியில் சுமார் 45 கி.மீ. தொலைவுக்கு விஜய் ரோடு ஷோ மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. நாளை மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற உள்ள இந்த ரோடு ஷோவில் மாமண்டூர், படாளம் கூட்ரோடு, கருங்குழி அய்யனார் கோவில், சவரம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகள் இடம்பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ரோடு ஷோ நடைபெறும் வழித்தடத்தில் 5 கி.மீ. தூரத்திற்கு ஒரு எம்.எல்.ஏ. என்ற அடிப்படையில் பணிகளை மேற்கொள்ள த.வெ.க. தலைமை அறிவுறுத்தியுள்ளது. இதனிடையே, மதுராந்தகத்தில் த.வெ.க. வேட்பாளரை ஆதரித்து கூட்டணி கட்சித் தலைவர்கள் இன்று பிரசாரம் செய்கின்றனர். பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர், விசிக தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் துரை வைகோ ஆகியோர் பங்கேற்று வாக்கு சேகரிக்க உள்ளனர்.