மதுராந்தகம் - தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் நிறைவு
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
06 Oct 2026, செவ்வாய் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 06 Oct 2026, Tuesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

மதுராந்தகம் - தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் நிறைவு

மதுராந்தகம் - தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் நிறைவு

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. கடந்த 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலுடன் ஒப்பிடும்போது, இரு தொகுதிகளிலும் இந்த இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் அதிமுக சார்பில் மரகதம் குமரவேலும், தாராபுரம் தொகுதியில் சத்தியபாமாவும் வெற்றி பெற்றனர். பின்னர் இருவரும் தங்களது எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்து, ஆளும் தவெகவில் இணைந்தனர். இதையடுத்து மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இரு தொகுதிகளிலும் கடந்த ஒரு மாதமாக அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டன. தேர்தல் பிரசாரம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, இன்று பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 6.30 மணிக்கு வேட்பாளர்களின் வாக்குச்சாவடி முகவர்கள் முன்னிலையில் தேவையான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு, மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. தொடர்ந்து காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. தொடக்கம் முதலே ஆண், பெண் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களித்தனர். பல்வேறு மையங்களில் நீண்ட வரிசை காணப்பட்டது. இளம் வாக்காளர்கள் மற்றும் பெண்களும் ஆர்வமாக வாக்களித்தனர். வாக்களித்த பின்னர் வெளியே வந்த சிலர், விரலில் வைக்கப்பட்ட அடையாள மையை காட்டியபடி செல்பி எடுத்துக்கொண்டனர். தாராபுரம் தொகுதியிலும் காலை முதலே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. குண்டடம் அருகே மானூர்பாளையம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் அதிமுக வேட்பாளர் பானுமதி வீராச்சாமி வாக்களித்தார். திமுக வேட்பாளர் சுகன்யா முதல் வாக்காளராக வரிசையில் நின்று தனது வாக்கை பதிவு செய்தார். காட்டூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வாக்குச்சாவடியில் தவெக வேட்பாளர் சத்தியபாமா வாக்களித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் லட்சுமணன், கொல்லாபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் தனது வாக்கை செலுத்தினார். இரு தொகுதிகளிலும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் துணை ராணுவப் படையினர் மற்றும் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு முடிவடைந்தது. வாக்குப்பதிவு நிலவரம் மதுராந்தகம் தொகுதியில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 70.31 சதவீத வாக்குகள் பதிவாகின. 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலில் இதே நேரத்தில் 72.41 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. தாராபுரம் தொகுதியில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 68.08 சதவீத வாக்குகள் பதிவாகின. கடந்த பொதுத்தேர்தலில் மாலை 3 மணி நிலவரப்படி 71.15 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. மாலை 5 மணி நிலவரப்படி மதுராந்தகம் தொகுதியில் 83.86 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. 2026 பொதுத்தேர்தலில் இதே நேரத்தில் 87.84 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. இதன்படி, பொதுத்தேர்தலைக் காட்டிலும் இந்த இடைத்தேர்தலில் 3.98 சதவீதம் குறைவாக வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. மதுராந்தகம் தொகுதியில் மாலை 5 மணி வரை 1,79,288 வாக்குகள் பதிவாகின. தாராபுரம் தொகுதியில் மாலை 5 மணி நிலவரப்படி 78.53 சதவீத வாக்குகள் பதிவாகின. 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலில் இதே நேரத்தில் 87.74 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. இதனால், பொதுத்தேர்தலுடன் ஒப்பிடும்போது தாராபுரம் இடைத்தேர்தலில் 8.21 சதவீத வாக்குப்பதிவு குறைந்துள்ளது. மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணிகள் நடைபெற்றன. பின்னர் அவற்றை வாக்கு எண்ணும் மையங்களுக்கு பாதுகாப்பாக எடுத்துச் செல்ல தேர்தல் அதிகாரிகள் ஏற்பாடுகளை மேற்கொண்டனர். ஒருசில வாக்குச்சாவடிகளில் மின்வெட்டு உள்ளிட்ட காரணங்களால் வாக்குப்பதிவு சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் தவெக, திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் இடதுசாரிகள் என ஐந்து முனைப் போட்டி நிலவுகிறது. இரு தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் வரும் 9-ம் தேதி எண்ணப்படுகின்றன. அன்று பிற்பகலில் வெற்றி பெறும் வேட்பாளர் யார் என்பது தெரியவரும். தமிழகத்தில் முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் இடைத்தேர்தல் என்பதால், இந்தத் தேர்தல் முடிவுகள் மீது அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.