மதுராந்தகம் மற்றும் தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த இரு தொகுதிகளிலும் முதல்-அமைச்சர் விஜய் தலா 2 நாட்கள் என மொத்தம் 4 நாட்கள் தீவிர பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் (தனி), திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) ஆகிய தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் த.வெ.க., தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுகின்றன. இதனால் இரு தொகுதிகளிலும் 5 முனைப் போட்டி நிலவுகிறது. மதுராந்தகம் தொகுதியில் த.வெ.க. சார்பில் மரகதம் குமரவேல், தி.மு.க. சார்பில் பரந்தாமன், அ.தி.மு.க. சார்பில் கணிதா சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சுகந்தி, நாம் தமிழர் கட்சி சார்பில் ஜானகிராமன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். தாராபுரம் தொகுதியில் த.வெ.க. சார்பில் சத்தியபாமா, தி.மு.க. சார்பில் சுகன்யா, அ.தி.மு.க. சார்பில் பானுமதி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் லட்சுமணன், நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகா ஆகியோர் களத்தில் உள்ளனர். இரு தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாக உள்ளது. இதையடுத்து வரும் 20-ந்தேதிக்கு பிறகு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த கட்சிகளின் நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் முதல்-அமைச்சர் விஜய் 4 நாட்கள் பிரசாரம் செய்ய உள்ளார். இந்த மாத இறுதியிலும், அடுத்த மாத தொடக்கத்திலும் தலா 2 நாட்கள் வீதம் அவர் இரு தொகுதிகளிலும் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக இரு இடங்களிலும் பிரமாண்ட பொதுக்கூட்டங்களை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. பொதுக்கூட்டங்களுக்கான இடங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தாராபுரத்தில் உடுமலை சாலையில் உள்ள திருமலைபாளையம் பகுதியில் பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டிய சூழலில் த.வெ.க. இருப்பதால், முதல்-அமைச்சர் விஜய்யின் பிரசாரம் கட்சிக்கு சாதகமாக அமையும் என நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது விஜய் பிரசாரம் மேற்கொண்ட இடங்களில் அவரை காண மக்கள் திரண்டனர். இதனால் அவரது பிரசாரக் கூட்டங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. தற்போது அவர் முதல்-அமைச்சராக தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்க உள்ளதால், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. த.வெ.க. ஆட்சிக்கு வந்த பிறகு, முதல்-அமைச்சர் விஜய் பங்கேற்கும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் என்பதால் இதன் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதனிடையே, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட தலைவர்களும் இரு தொகுதிகளிலும் பிரசாரம் செய்ய தயாராகி வருகின்றனர். கம்யூனிஸ்டு கட்சிகளின் தலைவர்களும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர். மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளிலும் மு.க.ஸ்டாலின் தலா ஒரு நாள் என மொத்தம் 2 நாட்கள் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் உதயநிதி ஸ்டாலினின் பிரசாரத் திட்டமும் தயாராகி வருகிறது. முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அடுத்தடுத்து பிரசாரத்தில் ஈடுபட உள்ளதால், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் தேர்தல் களம் தற்போது பரபரப்படைந்துள்ளது. தங்கள் கட்சித் தலைவர்களை வரவேற்கும் வகையில் நிர்வாகிகளும் தொண்டர்களும் தீவிர ஏற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.