தமிழகத்தில் காலியாக உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9-ம் தேதி தொடங்கிய நிலையில், தேர்தல் களம் தற்போது சூடுபிடித்துள்ளது. இந்த இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக), திமுக, அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சி என 4 முனைப்போட்டி நிலவுகிறது. இதில் நாம் தமிழர் கட்சி தனது வேட்பாளர்களை இன்னும் அறிவிக்காத நிலையில், மற்ற 3 கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகியோர், தற்போது அதே மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் தவெக சார்பில் போட்டியிடுகின்றனர். திமுக சார்பில் மதுராந்தகம் தொகுதியில் ஐ.பரந்தாமனும், தாராபுரத்தில் எஸ்.சுகன்யாவும் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர். அதிமுக சார்பில் மதுராந்தகத்தில் கணிதா சம்பத்தும், தாராபுரத்தில் பானுமதியும் போட்டியிடுகின்றனர். நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் நாளை அறிவிக்கப்பட உள்ளனர். இடைத்தேர்தல் என்றாலும் இரு தொகுதிகளிலும் போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வெற்றியைப் பெற அரசியல் கட்சிகள் பல்வேறு தேர்தல் வியூகங்களை வகுத்து வருகின்றன. அந்த வகையில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான தேர்தல் பணிகளை மேற்கொள்ள தவெக சார்பில் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை அக்கட்சியின் தலைவரும், முதல் அமைச்சருமான விஜய் பிறப்பித்துள்ளார். மதுராந்தகம் (தனி) சட்டமன்றத் தொகுதிக்கான தேர்தல் பொறுப்பாளராக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், எம்.எல்.ஏ. பாலாஜி என்ற மணிகண்டனும் தேர்தல் பணிகளில் பொறுப்பு வகிக்கிறார். தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்கான பொறுப்பாளராக அமைச்சர் அருண்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். அவருடன் அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க உள்ளனர். மேலும், தேர்தல் பணிகளில் பங்கேற்கும் குழுவில் திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. பாலமுருகன், திருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. சத்தியபாமா, பல்லடம் தொகுதி எம்.எல்.ஏ. ராம்குமார், நாமக்கல் தொகுதி எம்.எல்.ஏ. திலீப், கிருஷ்ணராயபுரம் தொகுதி எம்.எல்.ஏ. சத்யா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் இடைத்தேர்தல் பணிகளை மேற்கொள்ள உள்ளனர். தேர்தல் கண்காணிப்பாளர்கள் இரு தொகுதிகளிலும் நடைபெறும் தேர்தல் பணிகளை மேற்பார்வையிடுவார்கள். சம்பந்தப்பட்ட தொகுதிகளுக்கு உட்பட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், தேர்தல் பொறுப்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தவெகவின் ‘விசில்’ சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் மீண்டும் வெற்றி பெறும் வகையில் அனைவரும் தேர்தல் பணியாற்ற வேண்டும் என்றும், இடைத்தேர்தல் வரலாற்றில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளர்கள் வெற்றி பெறும் வகையில் புதிய வரலாறு படைக்க வேண்டும் என்றும் கட்சித் தலைமை கேட்டுக்கொண்டுள்ளது. இரு தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்களுக்கு ஆதரவாக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் விரைவில் கட்சி சார்பில் தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.