செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் (தனி) மற்றும் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதிகளில் அடுத்த மாதம் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் மற்றும் பரிசீலனை பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று (சனிக்கிழமை) வெளியிடப்படுகிறது. மதுராந்தகம் தொகுதி மதுராந்தகம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மரகதம் குமரவேல், தி.மு.க. சார்பில் பரந்தாமன், அ.தி.மு.க. சார்பில் கணிதா சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சுகந்தி, நாம் தமிழர் கட்சி சார்பில் ஜானகிராமன் உள்ளிட்ட 48 பேர் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். அவற்றில் 28 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. தாராபுரம் தொகுதி திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) தொகுதியில் கடந்த 9-ந்தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. தாராபுரம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நடைபெற்ற இந்தப் பணி, கடந்த 16-ந்தேதியுடன் முடிவடைந்தது. இதில் தமிழக வெற்றிக் கழகம், தி.மு.க., அ.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 51 பேர் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் மீதான பரிசீலனை கடந்த 17-ந்தேதி நடைபெற்றது. அதில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சத்தியபாமா, தி.மு.க. வேட்பாளர் சுகன்யா, அ.தி.மு.க. வேட்பாளர் பானுமதி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா, இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் லட்சுமணன் உள்ளிட்ட 22 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. எஞ்சிய 29 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இன்று இறுதி பட்டியல் இரு தொகுதிகளிலும் வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்கு இன்று கடைசி நாளாகும். இதையடுத்து, இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது. ஏற்கனவே வேட்பாளர்கள் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கியுள்ள நிலையில், இறுதிப் பட்டியல் வெளியான பிறகு பிரசாரம் மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.