மதுராந்தகம், தாராபுரத்தில் தவெக வெற்றி.. திமுக, அதிமுகவை பின்னுக்குத் தள்ளிய வேட்பாளர்கள்! மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்களில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இரு தொகுதிகளிலும் திமுக வேட்பாளர்களைக் காட்டிலும் அதிக வாக்குகளைப் பெற்று மரகதம் குமரவேலும், சத்யபாமாவும் வெற்றியைத் தங்கள் வசமாக்கியுள்ளனர். மதுராந்தகத்தில் மரகதம் குமரவேல் வெற்றி** செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் தவெக சார்பில் மரகதம் குமரவேல், திமுக சார்பில் பரந்தாமன், அதிமுக சார்பில் கணிதா சம்பத் உள்ளிட்ட 27 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இத்தொகுதியில் மொத்தம் 2,13,788 வாக்காளர்கள் இருந்த நிலையில், 1,84,413 பேர் வாக்களித்தனர். இதன் மூலம் 86.26 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றது. பதிவான வாக்குகள் 21 சுற்றுகளாக எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கையின் முடிவில் மரகதம் குமரவேல் 61,470 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் பரந்தாமன் 43,916 வாக்குகளைப் பெற்றார். இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 17,554 ஆகும். அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத் 38,770 வாக்குகளைப் பெற்றார். நாம் தமிழர் கட்சிக்கு 1,703 வாக்குகளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 1,441 வாக்குகளும் கிடைத்தன. தாராபுரத்திலும் தவெக வெற்றிக் கொடி திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் தவெக சார்பில் சத்யபாமா, திமுக சார்பில் சுகன்யா, அதிமுக சார்பில் பானுமதி உள்ளிட்ட 22 வேட்பாளர்கள் களமிறங்கினர். இந்தத் தொகுதியில் 2,23,306 வாக்காளர்களில் 1,79,314 பேர் வாக்களித்தனர். மொத்தம் 80.30 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்குகள் 23 சுற்றுகளாக எண்ணப்பட்டன. இறுதியில் தவெக வேட்பாளர் சத்யபாமா 62,596 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் சுகன்யா 52,400 வாக்குகளைப் பெற்றார். இதனால் சத்யபாமா 10,196 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியடைந்தார். அதிமுக வேட்பாளர் பானுமதி 41,078 வாக்குகளைப் பெற்றார். நாம் தமிழர் கட்சிக்கு 4,954 வாக்குகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 1,099 வாக்குகளும் கிடைத்தன. தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்கள் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து கட்சித் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை தவெக அலுவலகத்திலும் ஆதரவாளர்கள் உற்சாகமாகக் கொண்டாடினர். அப்போது, எம்எல்ஏ சரவணன், முதல்வர் விஜய்யின் புகைப்படத்துக்கு இனிப்பு ஊட்டிய நிகழ்வு கவனம் பெற்றது. இந்த வெற்றியைப் பற்றிக் கருத்து தெரிவித்த அமைச்சர் சரத்குமார், அரசின் குறுகிய கால ஆட்சிக்கு மக்கள் அளித்த ஆதரவாக இதைப் பார்ப்பதாகக் கூறினார். இளைஞர்கள் மற்றும் பெண்களின் ஆதரவு தவெகவுக்கு வலுசேர்த்துள்ளதாகவும், வரும் தேர்தலில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும் வாய்ப்பு உருவாகும் என்றும் அவர் தெரிவித்தார். தபால் வாக்குகளில் திமுக முன்னிலை தாராபுரம் தொகுதியில் பதிவான 1,406 தபால் வாக்குகளில் திமுக 613 வாக்குகளைப் பெற்று முதலிடத்தைப் பிடித்தது. அதிமுக 406 வாக்குகளையும், தவெக 255 வாக்குகளையும் பெற்றன. நாம் தமிழர் கட்சிக்கு 19 வாக்குகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 7 வாக்குகளும் கிடைத்தன. வாக்கு எண்ணிக்கையின்போது மதுராந்தகம் தொகுதியில் சில மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் சீல்கள் தொடர்பாக திமுக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்திருந்தன. இதனால் சில சுற்றுகளில் வாக்கு எண்ணும் பணி பாதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.