தமிழகத்தில் மதுபான உற்பத்தி முதல் டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்வது வரை அனைத்து பணிகளையும் கணினிமயமாக்கும் திட்டம் கடந்த 2024-ம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, கடைகளில் விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு மதுபாட்டிலும் கையடக்க கருவி மூலம் ஸ்கேன் செய்யப்பட்டு விற்பனை பதிவு செய்யப்படுகிறது. மேலும், கியூ.ஆர். குறியீட்டை ஸ்கேன் செய்து டிஜிட்டல் முறையிலும் பணம் செலுத்தும் வசதி உள்ளது. இருப்பினும், டாஸ்மாக் கடைகளில் தினசரி சராசரியாக ரூ.150 கோடிக்கும் அதிகமாகவும், வார இறுதி மற்றும் சிறப்பு விடுமுறை நாட்களில் அதைவிட அதிகமாகவும் விற்பனை நடைபெறுகிறது. இதில் 80 சதவீதத்திற்கும் அதிகமான தொகை ரொக்கமாகவே வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த பணத்தை ஊழியர்கள் கடைகளில் பாதுகாப்பாக வைத்திருந்து, மறுநாள் வங்கியில் செலுத்துகின்றனர். இவ்வாறு பணத்தை எடுத்துச் செல்லும்போது கொள்ளை சம்பவங்களும் நடைபெறுகின்றன. இதற்கிடையில், மதுபிரியர்கள் தங்களுக்கு தேவையான மதுபான வகைகளை டாஸ்மாக் இணையதளத்தில் முன்கூட்டியே தேர்வு செய்து, அதற்கான தொகையை ஆன்லைனில் செலுத்தி, கிடைக்கும் குறியீட்டை கடையில் காண்பித்து மதுபாட்டில்களை வாங்கும் வசதியும் உள்ளது. ஆனால், இந்த முறையில் பணம் செலுத்தி வருபவர்களுக்கு மதுபாட்டில்களை வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. ரொக்கமாக பணம் பெறுவதில் ஊழியர்கள் அதிக ஆர்வம் காட்டுவதே இதற்கு முக்கிய காரணம் என டாஸ்மாக் தரப்பில் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, கடைகளில் ரொக்கப் பணப் புழக்கத்தை குறைத்து, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை அதிகரிக்க டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறுகையில், மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பதைத் தடுப்பதுடன், சில்லரை தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் வகையில் டிஜிட்டல் பரிவர்த்தனையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதன்படி, ரூ.500 வரை மட்டுமே ரொக்கமாக பணம் செலுத்த அனுமதிக்கவும், அதற்கு மேற்பட்ட தொகையை டிஜிட்டல் முறையில் மட்டுமே வசூலிக்கவும்** முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான அறிவுரைகள் விரைவில் அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.