மதுபானங்களுக்கு ‘சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலத் தீர்வை’ விதிக்க தமிழ்நாடு அரசு முடிவு
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
07 Aug 2026, வெள்ளி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 07 Aug 2026, Friday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

மதுபானங்களுக்கு ‘சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலத் தீர்வை’ விதிக்க தமிழ்நாடு அரசு முடிவு

மதுபானங்களுக்கு ‘சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலத் தீர்வை’ விதிக்க தமிழ்நாடு அரசு முடிவு

மதுபானங்களின் பயன்பாடு மற்றும் அவற்றின் கண்ணாடி, நெகிழி (பிளாஸ்டிக்) கொள்கலன்களால் உருவாகும் கழிவுகள் சுற்றுச்சூழலுக்கும் சமூகத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதால், மதுபான விற்பனைக்கு புதிய ‘சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலத் தீர்வை’ விதிக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.இதுகுறித்து வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் த. லோகேஷ் தமிழ்செல்வன் வெளியிட்ட விளக்க உரையில், மதுபானக் கொள்கலன்கள் முறையாக அகற்றப்படாததும், போதிய அளவில் மறுசுழற்சி செய்யப்படாததும் சுற்றுச்சூழல் சீர்கேடு, பொதுச் சுகாதார பாதிப்பு மற்றும் வனவிலங்குகளுக்கு ஆபத்தை உருவாக்குவதாக அரசு கவலை தெரிவித்துள்ளது.மேலும், இந்த பாதிப்புகளை குறைப்பது மாநில அரசின் பொறுப்பு என்பதை பல்வேறு நீதிமன்றத் தீர்ப்புகளும் வலியுறுத்தியுள்ளன. அதனால் சுற்றுச்சூழலுக்கு உகந்த நிலையான நடைமுறைகளை ஊக்குவிக்க தேவையான நிதி மற்றும் ஒழுங்குமுறை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அரசு கருதுகிறது.அதன்படி, மதுபான விற்பனையில் வசூலிக்கப்படும் ‘சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலத் தீர்வை’ மூலம் கிடைக்கும் வருவாய் பல்வேறு நலத்திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், மதுபானக் கொள்கலன்களின் மறுசுழற்சி, பாதுகாப்பான அகற்றல் மற்றும் மறுபயன்பாட்டை மேம்படுத்துதல், மதுப் பழக்கத்திலிருந்து மீள விரும்புவோருக்கான மறுவாழ்வு மற்றும் மீட்பு திட்டங்கள், மதுப் பழக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நலத்திட்டங்கள் மற்றும் வாழ்வாதார உதவிகள் வழங்குதல் ஆகியவை இடம்பெற்றுள்ளன.மேலும், மது அருந்துவதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் பயன்படுத்தப்பட்ட மதுபானக் கொள்கலன்களை தவறாக அப்புறப்படுத்துவதால் உருவாகும் சுற்றுச்சூழல் ஆபத்துகள் குறித்து விழிப்புணர்வு மற்றும் கல்வி பிரச்சாரங்கள் நடத்தப்படவுள்ளன. அதேபோல், காடுகள், வனவிலங்குகள் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாத்து மீட்டெடுக்கும் நடவடிக்கைகளுக்கும் இந்த நிதி பயன்படுத்தப்படும். விதிகளில் குறிப்பிடப்படும் பிற சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலத் திட்டங்களுக்கும் இந்த வருவாய் ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த புதிய தீர்வையை நடைமுறைப்படுத்துவதற்காக, 2006-ஆம் ஆண்டு தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரிச் சட்டத்தில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ள அரசு முடிவு செய்துள்ளதாகவும், அதற்கான சட்டமுன்வடிவு இந்த முடிவை செயல்படுத்தும் நோக்கில் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் விளக்க உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.