சென்னை தியாகராய நகரில் இன்று பா.ம.க.வைச் சேர்ந்த சவுமியா அன்புமணி, “மது இல்லாத தமிழகம்” என்ற புதிய இயக்கத்தை தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் மதுப் பழக்கத்தால் ஏற்படும் சமூக, சுகாதார மற்றும் பொருளாதார பாதிப்புகளை முழுமையாக ஒழிப்பதே இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. “குழந்தைகளுக்கு கல்வி வழங்குவதற்காகவே மது விற்பனை செய்யப்படுகிறது என்றால், அத்தகைய கல்வியே தேவையில்லை. நாடு மது இல்லாமல் இருப்பதே போதுமானது” என்ற மகாத்மா காந்தியின் கருத்தை முன்வைத்து இந்த இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. மது அருந்துவதால் 200-க்கும் மேற்பட்ட ஆபத்தான நோய்கள் ஏற்படுவதாக சவுமியா அன்புமணி தெரிவித்துள்ளார். எனவே, மது இல்லாத தமிழகத்தை உருவாக்க மேற்கொள்ளப்படும் முயற்சிக்கு பொதுமக்களும் அரசும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.