தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையங்களை (GCC) அமைப்பது மற்றும் ஏற்கனவே செயல்பட்டு வரும் மையங்களை விரிவுபடுத்துவது தொடர்பாக, முதல்-அமைச்சர் விஜய் முன்னிலையில் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதுதொடர்பாக முதல்-அமைச்சர் விஜய் தனது எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது: இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் முன்னணி உலகளாவிய தகவல் தொடர்பு நிறுவனம், தமிழ்நாட்டில் புதிய உலகளாவிய திறன் மையத்தை அமைப்பதற்காக தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்துடன், ஏர்ன்ஸ்ட் & யங் (Ernst & Young) நிறுவனத்தின் மூலம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. சுமார் ரூ.1,000 கோடி முதலீட்டில் உருவாகும் இந்த மையத்தின் மூலம் 2,000-க்கும் அதிகமான உயர் மதிப்புடைய புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மையம், சென்னையின் மவுண்ட் பூந்தமல்லி சாலையில் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள ‘GCC காரிடார்’ பகுதியில் அமைய உள்ளது. மேலும், ஸ்வீடனைச் சேர்ந்த சிக்மா டெக்னாலஜி குரூப் நிறுவனம், தனது இந்திய நிறுவனமான ஸ்ரியா சொல்யூஷன்ஸ் மூலம் திருச்சிராப்பள்ளி மற்றும் சென்னையில் செயல்பட்டு வரும் உலகளாவிய திறன் மையங்களை விரிவுபடுத்த உள்ளது. இதன்மூலம் எம்பெடட் சிஸ்டம்ஸ், மின்மயமாக்கல் மற்றும் தொழில்துறை டிஜிட்டல்மயமாக்கல் உள்ளிட்ட துறைகளில் 600 உயர் மதிப்புடைய வேலைவாய்ப்புகளை உருவாக்க நிறுவனம் உறுதியளித்துள்ளது. இந்த விரிவாக்கம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம், முதல்-அமைச்சர் விஜய் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது. சிக்மா டெக்னாலஜி குரூப் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி மைக்கேல் கார்ல்சன், ஸ்ரியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தீபக் ஜேக்கப், IAS ஆகியோர் ஒப்பந்தத்தை பரிமாறிக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில், இங்கிலாந்துக்கான இந்திய தூதர் குமரன் பெரியசாமி, IFS, சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் தமிழக அரசின் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.