மதுரையில் ஒரே நாளில் அடுத்தடுத்து மூன்று கொலைச் சம்பவங்கள் நடந்துள்ளன. இதில், ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையம் அருகே ரவுடி ஒருவர் ஓட ஓட விரட்டிச் சென்று கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சோலையழகுபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் என்ற சப்பாணி சரவணன் (50). பிரபல ரவுடியான இவர் மீது மதுரை மாநகரில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஒரு வழக்கில் சிறையில் இருந்த சரவணன், சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். சோலையழகுபுரம் பிரதான சாலையில் உள்ள டீக்கடைக்கு அவர் வழக்கமாக சென்று வந்ததாக கூறப்படுகிறது. நேற்று காலையும் வழக்கம்போல் அந்த டீக்கடைக்கு சென்ற சரவணன், அங்கு டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள்களில் 5 பேர் அங்கு வந்தனர். அவர்கள் திடீரென சரவணனிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பின்னர், தங்களிடம் இருந்த கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் அவரை சரமாரியாக தாக்கினர். தாக்குதலில் இருந்து தப்பிக்க சரவணன் அங்கிருந்து ஓடினார். ஆனால், அந்த கும்பல் அவரை விடாமல் பின்தொடர்ந்து சென்று மீண்டும் தாக்கியது. சாலையின் நடுவே நடந்த இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த சரவணன் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். சரவணன் கொலை செய்யப்பட்ட இடத்துக்கு அருகிலேயே ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையம் அமைந்துள்ளது. சம்பவத்துக்குப் பிறகு கொலையாளிகள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நடந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஜெய்ஹிந்த்புரம் போலீசார், சரவணனின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். துணை கமிஷனர் இனிகோ திவ்யன் சம்பவ இடத்தில் நேரில் விசாரணை நடத்தினார். இதுகுறித்து போலீசார் கூறுகையில், சரவணன் மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் தெரிவித்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும், கொலை நடந்த பகுதியில் பதிவாகியுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வருவதாகவும் கூறினர். இதே நாளில் மதுரை மாநகரப் பகுதியில் சரவணன் கொலை செய்யப்பட்ட நிலையில், புறநகர் பகுதியான மேலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மெக்கானிக் செல்லதுரையும், ஒத்தக்கடை அருகே அன்னமயில் என்ற பெண்ணும் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஒரே நாளில் மதுரை மாவட்டத்தில் மூன்று கொலைகள் நடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.