மதுரை மாவட்டம் மேலூரில் இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை தொடர்பாக மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலூர் அரசு மேல்நிலைப்பள்ளியின் பின்புற பகுதியில் இளைஞர் ஒருவர் வெட்டுக்காயங்களுடன் உயிரிழந்து கிடப்பதாக மேலூர் காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஏ.எஸ்.பி. சிவக்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, உயிரிழந்த இளைஞரின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் சிவகங்கை மாவட்டம் மேலப்பூவண்டி பகுதியைச் சேர்ந்த செல்லப்பாண்டியின் மகன் செல்லத்துரை என்பது தெரியவந்தது. செல்லத்துரை கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக மேலூர் கஸ்தூரிபாய் நகரில் உள்ள தனது சகோதரி செல்விபிரியாவின் வீட்டில் தங்கியிருந்தார். மேலும், தனது உறவினரான முருகனின் மெக்கானிக் கடையில் உதவியாளராக வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று இரவு தனது சகோதரியிடம் வெளியே சென்று வருவதாகக் கூறிவிட்டு செல்லத்துரை வீட்டை விட்டு புறப்பட்டுள்ளார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதற்கிடையே, மேலூர் அரசு மேல்நிலைப்பள்ளியின் பின்புறத்தில் செல்லத்துரை வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இந்த கொலையை செய்தவர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.