செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் மற்றும் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம், தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் என 5 முனைப் போட்டி உருவாகியுள்ளது. இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9-ந்தேதி முதல் அந்தந்த கோட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற்று வருகிறது. 12, 13, 14-ந்தேதிகளில் தொடர் விடுமுறை காரணமாக மனுத்தாக்கல் நடைபெறாத நிலையில், நேற்று மீண்டும் வேட்புமனுக்கள் பெறப்பட்டன. மதுராந்தகம் தொகுதியில் நேற்று மட்டும் 14 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதன் மூலம் இதுவரை தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. தமிழக வெற்றிக் கழக வேட்பாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மரகதம் குமரவேல், அக்கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான என்.ஆனந்துடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். தி.மு.க. வேட்பாளர் பரந்தாமன், முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன், முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளுடன் வந்து மனு தாக்கல் செய்தார். நாம் தமிழர் கட்சி சார்பில் ஜானகிராமனும் வேட்புமனு தாக்கல் செய்தார். இதனிடையே, பனைமரம் ஏறும் தொழிலாளியான சதீஷ்குமார், தனது தொழிலை பிரதிபலிக்கும் வகையில் பனைமரம் ஏறும் உபகரணங்களுடன் வந்து சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்தார். அவரது இந்த நடவடிக்கை அங்கு கவனம் பெற்றது. தாராபுரம் தொகுதியில் நேற்று ஒரே நாளில் 15 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதையடுத்து, அங்கு இதுவரை தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. தளவாய்பட்டினத்தைச் சேர்ந்த வக்கீல் சுகன்யா, தி.மு.க. வேட்பாளராக நேற்று 4 மனுக்களை தாக்கல் செய்தார். முன்னதாக அண்ணா படத்துக்கு மாலை அணிவித்த அவர், முன்னாள் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி உள்ளிட்டோருடன் சென்று ஆர்.டி.ஓ. பெலிக்ஸ் ராஜாவிடம் மனுக்களை வழங்கினார். அவரது கணவர் மணிவாசகமும் ஒரு மனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் செய்ய இன்று (புதன்கிழமை) கடைசி நாள் என்பதால், தாராபுரத்தில் த.வெ.க. வேட்பாளர் சத்தயபாமா, அ.தி.மு.க. வேட்பாளர் பானுமதி மற்றும் இந்திய கம்யூனிஸ்டு, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்ய உள்ளனர். மதுராந்தகம் தொகுதியில் அ.தி.மு.க. மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர்களும் இன்று மனு தாக்கல் செய்ய உள்ளனர். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறுகிறது. வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் நாளை மறுநாள் ஆகும். அக்டோபர் 6-ந்தேதி வாக்குப்பதிவும், அக்டோபர் 9-ந்தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது.