செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் (தனி) சட்டமன்ற தொகுதியில் அடுத்த மாதம் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் போட்டியிட த.வெ.க. சார்பில் மரகதம் குமரவேல், தி.மு.க. சார்பில் பரந்தாமன், அ.தி.மு.க. சார்பில் கணிதா சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சுகந்தி, நாம் தமிழர் கட்சி சார்பில் ஜானகிராமன் உள்ளிட்ட 48 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று நடைபெற்றது. இதில் த.வெ.க., தி.மு.க., அ.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்ளிட்ட 28 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. 20 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இதேபோல், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதியிலும் வருகிற 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி தாராபுரம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் கடந்த 9-ந்தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. நேற்று முன்தினத்துடன் மனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், மொத்தம் 51 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான பரிசீலனை ஆர்.டி.ஓ. பெலிக்ஸ் ராஜா தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் 22 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் சத்தியபாமா, தி.மு.க. வேட்பாளர் வக்கீல் சுகன்யா, அ.தி.மு.க. வேட்பாளர் பானுமதி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா, இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் லட்சுமணன் உள்ளிட்டோரின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. மேலும், 13 சுயேச்சை வேட்பாளர்களின் மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. மொத்தம் தாக்கல் செய்யப்பட்ட 51 மனுக்களில் 22 மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், 29 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. வேட்பு மனுக்களை வாபஸ் பெற நாளை (சனிக்கிழமை) கடைசி நாளாகும். அன்றைய தினமே மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.