மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு நாளை மறுநாள் செல்கிறார் முதல்-அமைச்சர் விஜய்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
26 Sep 2026, சனி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 26 Sep 2026, Saturday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு நாளை மறுநாள் செல்கிறார் முதல்-அமைச்சர் விஜய்

மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு நாளை மறுநாள் செல்கிறார் முதல்-அமைச்சர் விஜய்

தமிழக முதல்-அமைச்சர் விஜய், நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மதுரைக்கு வருகை தர உள்ளார். அப்போது உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையொட்டி காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 17-ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதைத் தொடர்ந்து செப்டம்பர் 18-ம் தேதி முதல் அக்டோபர் 2-ம் தேதி வரை மண்டல பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கான ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ தொடக்க விழா செப்டம்பர் 28-ம் தேதி உசிலம்பட்டியில் நடைபெறுவதாக இருந்தது. தற்போது இந்த நிகழ்ச்சி அதே தேதியில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் மதுரைக்கு வரும் முதல்-அமைச்சர் விஜய், மீனாட்சியம்மன் கோவிலுக்கும் சென்று தரிசனம் செய்ய உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதையடுத்து கோவில் நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு விஜய் முதல்முறையாக மதுரைக்கு வருவதால், விமான நிலையம் முதல் ராஜாஜி மருத்துவமனை வரையிலான வழித்தடம் உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். கோவில் தரிசனமும் நடைபெற உள்ளதால், உள்ளூர் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து கூடுதல் போலீசாரை பாதுகாப்புப் பணிக்கு வரவழைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், முதல்-அமைச்சரை வரவேற்கும் வகையில் ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் உள்ள கட்டிடங்களுக்கு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, வண்ணம் பூசப்பட்டு வருகிறது. போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த குண்டும் குழியுமான சாலைகளும் சீரமைக்கப்பட்டு வருகின்றன. சில பகுதிகளில் புதிய தார்ச்சாலை அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. விஜய்யின் வருகையையொட்டி பொதுமக்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் அதிகளவில் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், மதுரையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மதுரை வரும் முதல்-அமைச்சர் விஜய், பகல் 12.30 மணிக்கு ராஜாஜி மருத்துவமனையில் ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை’ தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து பிற்பகல் 1 மணிக்கு புனரமைக்கப்பட்ட காந்தி அருங்காட்சியகத்தை திறந்து வைக்கிறார். இதையடுத்து மாலை 4.30 மணியளவில் மீனாட்சியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.