மதுரை: இடத்தகராறில் பெண் அடித்துக் கொலை - 5 பேர் கைது
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
20 Sep 2026, ஞாயிறு | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 20 Sep 2026, Sunday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

மதுரை: இடத்தகராறில் பெண் அடித்துக் கொலை - 5 பேர் கைது

மதுரை: இடத்தகராறில் பெண் அடித்துக் கொலை - 5 பேர் கைது

மதுரை மாவட்டம் திருமோகூர் அருகே இடம் தொடர்பான நீண்டகாலப் பிரச்சினையில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக ராஜ்குமார் உள்ளிட்ட 5 பேரை ஒத்தக்கடை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டம் திருமோகூர் அருகே உள்ள பெருங்குடியைச் சேர்ந்தவர் அன்னமயில் (49). கணவரை இழந்த இவர், தனது மகனுடன் வசித்து வந்தார். அன்னமயிலுக்கும் அவரது கொழுந்தன் மற்றும் நாத்தனார் குடும்பத்தினருக்கும் இடையே நீண்ட நாட்களாக நிலம் தொடர்பாக தகராறு இருந்து வந்துள்ளது. இந்தப் பிரச்சினை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதில் அன்னமயிலுக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்ததைத் தொடர்ந்து, இரு தரப்பினருக்கும் இடையிலான மோதல் அதிகரித்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 18-ந்தேதி மீண்டும் அன்னமயிலுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவரைக் கொலை செய்ய உறவினர்கள் திட்டமிட்டதாகத் தெரிகிறது. இதற்கிடையே, நேற்று வீட்டின் முன்பு தனது சகோதரியுடன் நின்றுகொண்டிருந்த அன்னமயிலை அங்கு வந்த ஒரு கும்பல் கற்களால் தாக்கியுள்ளது. அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக அன்னமயில் ஓடியபோது, அந்தக் கும்பல் அவரைப் பின்தொடர்ந்து சென்று கடப்பாறையால் தாக்கியுள்ளது. அன்னமயிலைக் காப்பாற்ற முயன்ற அவரது சகோதரியையும் கடப்பாறையைக் காட்டி அந்தக் கும்பல் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து கம்பி மற்றும் செங்கற்களால் அன்னமயிலின் தலையில் கடுமையாகத் தாக்கிவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதில் படுகாயமடைந்த அன்னமயில் உயிரிழந்தார். இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ஒத்தக்கடை காவல்துறையினர், ராஜ்குமார் உள்ளிட்ட 5 பேரைக் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.