மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக அணைகளுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பாபநாசம், மணிமுத்தாறு உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் தற்போது 70 அடியை எட்டியுள்ளது. சேர்வலாறு அணையில் 83 அடி நீர் இருப்பு உள்ளது. பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 118 அடி முழுக் கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையில் தற்போது 67.61 அடி நீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 394 கனஅடி நீர் வரத்து காணப்படுகிறது. இதனால் அணையின் உள்பகுதியில் அமைந்துள்ள மணிமுத்தாறு அருவியில் தண்ணீர் பெருக்கெடுத்து கொட்டுகிறது. அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். அதே நேரத்தில், அருவியைச் சென்று பார்வையிடுவதற்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, தென்காசி மாவட்டத்தில் உள்ள கடனா அணையின் நீர்மட்டம் 62 அடியாகவும் (மொத்த கொள்ளளவு 85 அடி), ராமநதி அணையின் நீர்மட்டம் 56 அடியாகவும் (மொத்த கொள்ளளவு 84 அடி) உள்ளது. கருப்பாநதி அணையில் 70 அடி முழுக் கொள்ளளவில் தற்போது 50 அடி நீர் இருப்பு உள்ளது.