தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அடுத்தடுத்து வன்முறை சம்பவங்களில் உயிரிழந்து வருவது கவலையையும் அச்சத்தையும் ஏற்படுத்துவதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், கல்வி பயில வேண்டிய இளம் தலைமுறையினர் கொடூரமான சம்பவங்களுக்கு பலியாகி வருவது தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து கேள்விகளை எழுப்புவதாக குறிப்பிட்டுள்ளார். 2026-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் செப்டம்பர் 18-ம் தேதி வரை மாணவர்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பாக நடைபெற்ற பல்வேறு மரண சம்பவங்களை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் 10-ம் வகுப்பு படித்து வந்த 15 வயது மாணவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே 4-ம் வகுப்பு படித்த 9 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் போடி அருகே பள்ளி மாணவர்கள் இருவர் கிணற்றில் தள்ளப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவமும், கோவை மாவட்டத்தில் பொறியியல் கல்லூரி மாணவர் சக மாணவர்கள் குழுவால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவமும் இடம்பெற்றுள்ளன. சென்னை திருவொற்றியூரில் பிளஸ்-2 மாணவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 12 பள்ளி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். சேலம் மாவட்டம் கே.ஆர்.தோப்பூரில் 10-ம் வகுப்பு மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவமும் நடைபெற்றுள்ளது. இத்தகைய சம்பவங்கள் மாணவர்களிடையே வன்முறைச் செயல்பாடுகள் எந்த அளவுக்கு அதிகரித்துள்ளன என்பதை வெளிப்படுத்துவதாக வேல்முருகன் தெரிவித்துள்ளார். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர், அவர்கள் பாதுகாப்பாக வீடு திரும்புவார்களா என்ற அச்சத்துடன் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் போதைப்பொருட்கள் எளிதில் கிடைப்பதைத் தடுக்கத் தவறியது யார் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். குற்றங்கள் நடந்த பின்னர் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்வது மட்டுமே காவல்துறையின் நடவடிக்கையாக இருக்கக் கூடாது என்றும், உளவுத்துறை மற்றும் காவல்துறை கண்காணிப்பு நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். இந்தப் பிரச்சினையை வெறும் அறிக்கைகளுடன் கடந்து செல்லாமல், தமிழக அரசு அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக கல்வி நிறுவனங்களின் சுற்றுப்பகுதிகளில் போதைப்பொருள் விற்பனையைத் தடுக்க தீவிர சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும், உளவியல் நிபுணர்கள், ஆசிரியர்கள் மற்றும் காவல்துறையினரை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த கண்காணிப்புக் குழுக்களை அனைத்து கல்வி நிறுவனங்களிலும் அமைக்க வேண்டும் என்றும், பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் காவல்துறை ரோந்துப் பணியை கட்டாயமாக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். ஒவ்வொரு மாணவரின் உயிரும் ஒரு குடும்பத்தின் எதிர்காலத்துடன் தொடர்புடையது என்பதால், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒருங்கிணைந்த பாதுகாப்புத் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.