மக்களின் குடியிருப்பு உரிமைக்காக போராடிய இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது - மு.வீரபாண்டியன் கண்டனம்
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

07 Sep 2026 www.thinathulir.com

மக்களின் குடியிருப்பு உரிமைக்காக போராடிய இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது - மு.வீரபாண்டியன் கண்டனம்

மக்களின் குடியிருப்பு உரிமைக்காக போராடிய இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது - மு.வீரபாண்டியன் கண்டனம்

சென்னை சைதாப்பேட்டை தொகுதிக்குட்பட்ட மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஆதிசென்ன கேசவ பெருமாள் கோவில் நிலத்தில், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் வாடகை செலுத்தி குடியிருந்து வருகின்றனர். இங்கு வசிக்கும் 20 ஏழை குடும்பங்களைச் சேர்ந்தவர்களிடம் வீடுகளை காலி செய்யுமாறு மிரட்டல் விடுக்கப்படுவதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.இந்த குடியிருப்புகளை வேறு சில தனிநபர்கள் பயன்படுத்தும் வகையில், கோவில் நிர்வாகத்தைச் சேர்ந்த சிலர், அதிகாரிகள் மற்றும் தனிநபர்கள் இணைந்து தங்களுக்கு அழுத்தம் கொடுப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், தனது வீட்டுக்கு எதிரே ஏழை மக்களின் குடியிருப்புகள் இருப்பதை விரும்பாத ஒருவர், அந்த வீடுகளை அகற்றக் கோரி பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், குடியிருப்புகள் அமைந்துள்ள இடத்தை கைப்பற்றும் நோக்கில் அவர் செயல்படுவதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, இன்று காலை அந்த குடியிருப்பு பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.ஏழை மக்களின் குடியிருப்புகளைப் பாதுகாக்கக் கோரி பொதுமக்கள் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை அணுகினர். இந்த வழக்கில் தனிநபருக்கு சாதகமாக இந்து அறநிலையத்துறை அதிகாரிகளில் சிலர் நீதிமன்றத்தில் செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது.இதையடுத்து, அரசுக்குச் சொந்தமான கோவில் நிலத்தில் நீண்ட காலமாக வாடகை செலுத்தி வசித்து வரும் 20 குடும்பங்களின் குடியிருப்புகளைப் பாதுகாக்க வேண்டும் என்றும், அவர்களின் வசிப்பிட உரிமையை உறுதி செய்யும் வகையில் இந்து அறநிலையத்துறை நீதிமன்றத்தில் அவர்களுக்கு ஆதரவாக செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி, பாதிக்கப்பட்ட மக்களுடன் இணைந்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தென் சென்னை மாவட்டச் செயலாளர் எஸ்.கே.சிவா, மாணவர் பெருமன்ற மாவட்டச் செயலாளர் மணிகண்டன், மாவட்ட துணைச் செயலாளர் அபிஷேக், ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாவட்டச் செயலாளர் ர.சௌமியா, துணைத் தலைவர் கமலக்கண்ணன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே, 20 குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் உடைமைகளை காவல்துறையும் இந்து அறநிலையத்துறையும் எடுத்துச் சென்று சாலையில் வீசியதாகவும், கைக்குழந்தைகளுடன் இருந்த ஏழை மக்களை வீடுகளுக்குள் புகுந்து வெளியேற்றி, குடியிருப்புகளுக்கு சீல்வைத்ததாகவும்இந்தியக்கம்யூனிஸ்டகட்சிதெரிவித்துள்ளது.தமிழ்நாடு அரசின் காவல்துறை மற்றும் இந்து அறநிலையத்துறையின் இத்தகைய நடவடிக்கை ஏழை, அடித்தட்டு மக்களுக்கு எதிரானது என்றும், இதனை கடுமையாக கண்டிப்பதாகவும் கட்சி தெரிவித்துள்ளது.இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உடனடியாக தலையிட்டு, கோவில் நிலத்தில் வசித்து வரும் 20 குடும்பங்களின் குடியிருப்பு உரிமைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தியுள்ளது.