சிவபெருமானை வழிபடுவதற்காக கடைப்பிடிக்கப்படும் முக்கியமான எட்டு விரதங்களில் உமா மகேஸ்வர விரதமும் ஒன்றாகும். சோமவார விரதம், திருவாதிரை விரதம், சிவராத்திரி விரதம், பிரதோஷ விரதம், பாசுபத விரதம், அஷ்டமி விரதம், கேதார கவுரி விரதம் ஆகியவற்றுடன் உமா மகேஸ்வர விரதமும் முக்கியத்துவம் பெற்றதாக கருதப்படுகிறது. சிவனும் சக்தியும் ஒன்றோடொன்று இணைந்திருப்பதன் தத்துவத்தை எடுத்துரைப்பதே இந்த விரதத்தின் சிறப்பு. சிவமும் சக்தியும் இணைந்த வடிவமாக உமா மகேஸ்வரர் காட்சி அளிக்கிறார். உலக இயக்கத்திற்கு சிவம் மற்றும் சக்தி இரண்டும் அவசியம் என்பதை உணர்த்தும் தத்துவ வடிவமாக இது போற்றப்படுகிறது. புராணக் கதைகளின்படி, பிருகு முனிவர் தன்னை வணங்காமல் சிவபெருமானை மட்டுமே வழிபடுவதைக் கண்டு பார்வதி தேவி வருத்தமடைந்தார். இதையடுத்து கடுமையான தவம் மற்றும் விரதத்தை மேற்கொண்ட அவர், சிவபெருமானின் இடது பாகத்தைப் பெற்றதாக கூறப்படுகிறது. புரட்டாசி மாத பவுர்ணமி நாளில் உமா மகேஸ்வர விரதம் அனுசரிக்கப்படுகிறது. இந்த விரதத்தை முறையாக மேற்கொண்டால் கணவன்-மனைவிக்கு இடையிலான கருத்து வேறுபாடுகள் நீங்கி, குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. தொடர்ந்து 16 ஆண்டுகள் இந்த விரதத்தை கடைப்பிடிப்பது வழக்கமாக கூறப்படுகிறது. மகாவிஷ்ணுவுக்கு சாப விமோசனம் ஒருமுறை துர்வாச முனிவர் கயிலாயத்திற்குச் சென்று சிவபெருமானை தரிசித்தார். அப்போது சிவபெருமான் தனது கழுத்தில் அணிந்திருந்த வில்வ மாலையை துர்வாச முனிவருக்கு வழங்கினார். அந்த மாலையுடன் வைகுண்டம் சென்ற துர்வாசர், அதை மகாவிஷ்ணுவிடம் பக்தியுடன் அளித்தார். ஆனால் அதன் சிறப்பை உணராமல் மகாவிஷ்ணு அந்த மாலையை தனது வாகனமான கருடனின் மீது வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த துர்வாச முனிவர், மகாவிஷ்ணு லட்சுமி தேவியைப் பிரிந்து வாழ வேண்டும் என்று சாபமிட்டார். இதன் காரணமாக மகாவிஷ்ணு தனது ஒளியை இழந்ததாக புராணக் கதை தெரிவிக்கிறது. தனது தவறை உணர்ந்த மகாவிஷ்ணு, சாபத்தில் இருந்து விடுபடுவதற்கான வழியை கவுதம முனிவரிடம் கேட்டார். அதற்கு அவர் உமா மகேஸ்வர விரதத்தை கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தினார். கவுதம முனிவரின் அறிவுரைப்படி மகாவிஷ்ணு பூலோகத்திற்கு வந்து இந்த விரதத்தை மேற்கொண்டார். அவரது பக்தியை ஏற்ற சிவபெருமானும் பார்வதி தேவியும் உமா மகேஸ்வரர் வடிவில் காட்சி அளித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மகாவிஷ்ணுவின் சாபம் நீங்கி, அவர் மீண்டும் லட்சுமி தேவியுடன் இணைந்ததாக புராணங்களில் குறிப்பிடப்படுகிறது. யார் இந்த விரதத்தை மேற்கொள்ளலாம்? ஆண்கள், பெண்கள் என அனைவரும் உமா மகேஸ்வர விரதத்தை மேற்கொள்ளலாம். தங்களது மகள், மருமகள் மற்றும் குடும்பத்தினர் நலமாகவும் ஒற்றுமையுடனும் வாழ வேண்டும் என்பதற்காக வீட்டில் உள்ள பெரியவர்களும் இந்த விரதத்தை கடைப்பிடிக்கலாம். இந்த ஆண்டு உமா மகேஸ்வர விரதம் செப்டம்பர் 26-ம் தேதி, சனிக்கிழமை அனுசரிக்கப்படுகிறது. விரதம் இருப்பவர்கள் அன்று காலையில் குளித்து, இறைவனை மனதில் நினைத்து சங்கல்பம் எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் கலசத்தில் உமா மகேஸ்வரரை ஆவாகனம் செய்து பூஜை செய்யலாம். உமா மகேஸ்வரர் சிலை அல்லது படத்தை வைத்தும் வழிபாடு நடத்தலாம். சிலையை வைத்து வழிபாடு செய்பவர்கள், 16 ஆண்டுகள் விரதத்தை நிறைவு செய்த பிறகு அந்த சிலையை சிவன் கோவிலுக்கு வழங்க வேண்டும் என்று கூறப்படுகிறது. முதல் ஆண்டில் விரதம் மேற்கொள்பவர்கள் நைவேத்தியமாக அதிரசம் படைப்பது சிறப்பாக கருதப்படுகிறது. அடுத்தடுத்த ஆண்டுகளில் சிவபெருமானுக்கு விருப்பமான உணவுப் பொருட்களை நைவேத்தியமாக படைக்கலாம். வழிபாடு நிறைவடைந்த பின்னர் ஏழைகளுக்கு உணவு வழங்கிய பிறகே விரதம் இருப்பவர்கள் உணவு உட்கொள்ள வேண்டும். உமா மகேஸ்வர விரதத்தை முறையாக கடைப்பிடிப்பதன் மூலம் தம்பதிகளுக்கு இடையிலான கருத்து வேறுபாடுகள் நீங்கி, குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. தொடர்ந்து 16 ஆண்டுகள் இந்த விரதத்தை மேற்கொண்டால் விரும்பிய வரங்கள் கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது.