விழுப்புரம் மாவட்டத்தில் 771 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.100.25 கோடி வங்கிக் கடன் இணைப்பையும், கருணை அடிப்படையில் 24 பேருக்கு அரசு வேலைக்கான பணி நியமன ஆணைகளையும் அமைச்சர் என். ஆனந்த் வழங்கினார். தமிழ்நாடு முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின்படி, விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த் பங்கேற்று இந்த நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ரூ.15.84 கோடி மதிப்பீட்டில் நிறைவு செய்யப்பட்ட 22 வளர்ச்சிப் பணிகளையும் காணொளி வாயிலாக மக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார். பெண்களின் பொருளாதார முன்னேற்றத்தையும், சுயசார்பு நிலையையும் ஊக்குவிக்கும் நோக்கில் தமிழ்நாடு முழுவதும் 26 ஆயிரம் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.3,000 கோடி வங்கிக் கடன் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி, காணை உள்ளிட்ட ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த 659 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.85.09 கோடியும், விழுப்புரம், திண்டிவனம் உள்ளிட்ட நகர்ப்புறங்களைச் சேர்ந்த 112 குழுக்களுக்கு ரூ.15.16 கோடியும் வழங்கப்பட்டது. மொத்தம் 771 குழுக்களுக்கு ரூ.100.25 கோடி கடன் இணைப்பை அமைச்சர் வழங்கினார். இந்த நிதியைப் பயன்படுத்தி சிறு தொழில்கள், உணவுப் பொருட்கள் தயாரிப்பு, கைவினைப் பொருட்கள் உற்பத்தி உள்ளிட்ட சுயதொழில்களை விரிவுபடுத்தி பெண்கள் பொருளாதார ரீதியாக முன்னேற வேண்டும் என்றும், அதன் மூலம் பிற பெண்களுக்கும் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து, கருணை அடிப்படையில் 24 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிய அவர், குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க தமிழக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்துப் பேசினார். பணி ஆணைகளைப் பெற்றவர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்தார். ரூ.15.84 கோடியில் 22 வளர்ச்சிப் பணிகள் திறப்பு விழுப்புரம் மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, பேரூராட்சித் துறை, பள்ளிக்கல்வித்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஊரக வளர்ச்சித்துறை ஆகியவற்றின் சார்பில் முடிக்கப்பட்ட 22 திட்டப் பணிகள் திறந்து வைக்கப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பீடு ரூ.15 கோடியே 84 லட்சத்து 20 ஆயிரம் ஆகும். வானூர் சட்டமன்றத் தொகுதியில் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.3.57 கோடி செலவில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் மற்றும் சேமிப்புக் கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. வளவனூர் பேரூராட்சியில் தூய்மை இந்தியா திட்டம் 2.0 மூலம் ரூ.30 லட்சம் மதிப்பில் புதிய கழிவறைக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. அதேபோல், திருக்கோவிலூர் பகுதியில் ரூ.45 லட்சம் செலவில் புதிய ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளின் வசதிகளை மேம்படுத்தும் வகையில், நபார்டு திட்ட நிதியுதவியுடன் இராம்பாக்கம், இல்லோடு, பகண்டை, குமுளம், திருவெண்ணெய்நல்லூர், வீரபாண்டி உள்ளிட்ட இடங்களில் புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இதன் மூலம் மாணவர்களுக்குக் கூடுதல் வகுப்பறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வானூர் தொகுதியில் ரூ.21.60 லட்சம் மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சேவை மையமும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாற்றுத்திறனாளிகள் அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஒரே இடத்தில் எளிதாகப் பெற முடியும். கிராமப்புறங்களில் அடிப்படை வசதிகளை அதிகரிக்கும் நோக்கில் பொம்பூர், வில்வநத்தம், கூரானூர், சேமங்கலம், அரசூர் உள்ளிட்ட ஊராட்சிகளில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையங்கள், ஊராட்சி செயலகங்கள் மற்றும் வகுப்பறைக் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. குடிநீர் வசதிக்கும் முக்கியத்துவம் செஞ்சி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட எய்யில் காலனியில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், மயிலம் தொகுதியின் வடபுத்தூரில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவிலும், நங்கியாநந்தலில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவிலும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன. இதன் மூலம் அப்பகுதி மக்களின் குடிநீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்வதுடன், கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பெண்களின் பொருளாதார மேம்பாடு, வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம், வேளாண்மை, குடிநீர் மற்றும் கிராமப்புற அடிப்படைக் கட்டமைப்பு எனப் பல்வேறு துறைகளிலும் வளர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் கே.ஜே. ஷேக் அப்துல் ரஹ்மான், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஆனந்த் குமார் சிங், துணை ஆட்சியர் ஆகாஷ், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் சி. சிவகுமார், திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ். பழனிசாமி, திட்ட இயக்குநர் சுந்தர்ராஜன் மற்றும் பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.