திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியில், தனது மகளை கேலி செய்ததாகக் கூறி வாலிபரை கொலை செய்து, அவரது உடலை குடிநீர் தொட்டியில் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செம்பட்டியைச் சேர்ந்த பால்ராஜின் மகன் சங்கிலி முருகன் (38). இவர் கடந்த 10-ந்தேதி மாயமானார். இதுகுறித்து அவரது குடும்பத்தினர் செம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின்போது சங்கிலி முருகனின் உறவினர்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்தவர்களிடம் போலீசார் விசாரித்தனர். இதில், சங்கிலி முருகன் கொலை செய்யப்பட்டு அவரது உடல் மறைக்கப்பட்டிருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவல் போலீசாருக்கு கிடைத்தது. இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், சங்கிலி முருகனை காரில் அழைத்துச் சென்ற சிலர் திண்டுக்கல் சாலையில் வைத்து அவரது கழுத்தை அறுத்து கொலை செய்ததும், பின்னர் உடலை மதுரை திருமங்கலம் அருகே உச்சப்பட்டியில் உள்ள வீட்டு வசதி வாரிய குடிநீர் தொட்டியில் வீசியதும் தெரியவந்தது. இந்த கொலையில் தொடர்புடையதாக அதே பகுதியைச் சேர்ந்த பாக்கிய செல்வம், முருகன், மருதுபாண்டி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், குடிநீர் தொட்டியில் இருந்து சங்கிலி முருகனின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், பாக்கிய செல்வத்தின் மகளை சங்கிலி முருகன் கேலி செய்ததாகவும், இதனைத் தொடர்ந்து இரு குடும்பத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் கொலையில் முடிந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் செம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.