கர்நாடக மாநிலம் பெங்களூரு தெற்கு மாவட்டம் (ராமநகர்) கனகபுரா தாலுகாவில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் புதிய அணை அமைக்க கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த அணை திட்டத்துக்கு தமிழக அரசு தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.மேகதாது அணை திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கையை கர்நாடக அரசு தயாரித்து, மத்திய நீர் ஆணையத்திடம் ஏற்கனவே சமர்ப்பித்துள்ளது.இதனிடையே, அந்த திட்ட அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசு சார்பில் கோரப்பட்ட மனுவை சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்தது.இதையடுத்து மேகதாது அணை திட்டத்தை முன்னெடுப்பதில் கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. சமீபத்தில் மத்திய நீர் ஆணைய உறுப்பினர் யோகேஷ் பய்டங்கர் கர்நாடகத்துக்கு சென்று, மேகதாது அணை அமைய உள்ள இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்த சூழலில், கர்நாடக நீர்ப்பாசனத்துறை மந்திரி செலுவராயசாமி 4 நாள் பயணமாக கடந்த 31-ந் தேதி டெல்லி சென்றார். அங்கு நேற்று மத்திய நீர் ஆணைய தலைவர் அனுபம் பிரசாத்தை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.அப்போது, மேகதாது திட்டத்துக்கான திருத்தப்பட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அதுதொடர்பான தொழில்நுட்ப ஆய்வுகளை விரைவாக நிறைவு செய்து, திட்டத்தை விரைந்து பரிசீலித்து அனுமதி வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.