பாலிவுட் நடிகர் அமீர்கானின் அண்ணன் மன்சூர் கானின் மகளும் நடிகையுமான செயின் மேரி கான், மும்பையில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றதற்காகக் கைது செய்யப்பட்டு, சில மணி நேரங்களில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், காவல்துறையினர் தன்னைத் தாக்கியதாகக் குற்றம்சாட்டியுள்ள அவர், உடலில் ஏற்பட்ட காயங்களைக் காட்டும் வீடியோவைச் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். மும்பையில் உள்ள ஆகஸ்ட் கிராந்தி மைதானத்தில், ‘சிட்டிசன்ஸ் ஃபார் ஜஸ்டிஸ் அண்ட் பீஸ்’ (CJP) அமைப்பு சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில் செயின் மேரி கான் கலந்துகொண்டார். அப்போது, அவருடன் நடிகர் இம்ரான் கான் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டதாகவும், பின்னர் சில மணி நேரங்களில் அனைவரும் விடுவிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விடுதலையான பிறகு, காவல்துறையினர் தன்னைத் தாக்கியதாக செயின் மேரி கான் புகார் தெரிவித்துள்ளார். இதற்குச் சான்றாக, தனது கைகள், விரல்கள் மற்றும் கால்களில் காணப்படும் காயங்களை வீடியோவில் காட்டி, அதனைச் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், அந்தப் பதிவில், “எங்களுக்கு எந்தப் பயமும் இல்லாத அளவுக்கு எங்களை அளவுக்கு அதிகமாகப் பயமுறுத்தாதீர்கள்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். செயின் மேரி கானின் இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் பரவலாகக் கவனம் பெற்று வருகிறது. எனினும், காவல்துறையினர் தன்னைத் தாக்கியதாக அவர் தெரிவித்துள்ள குற்றச்சாட்டு குறித்து இதுவரை முழுமையான அதிகாரபூர்வத் தகவல்கள் வெளியாகவில்லை.