போலி இணையதளம் மூலம் ரூ.23 லட்சம் மோசடி; பெண் வங்கி ஊழியர் கைது
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

18 Sep 2026 www.thinathulir.com

போலி இணையதளம் மூலம் ரூ.23 லட்சம் மோசடி; பெண் வங்கி ஊழியர் கைது

போலி இணையதளம் மூலம் ரூ.23 லட்சம் மோசடி; பெண் வங்கி ஊழியர் கைது

சென்னையில் போலி இணையதளத்தை உருவாக்கி முதலீடு செய்யும் வகையில் நம்பவைத்து ரூ.23 லட்சம் மோசடி செய்ததாக பெண் வங்கி ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையை சேர்ந்த ஹேமா பிரியதர்ஷினி (40) என்பவருக்கு, கடந்த 2024-ம் ஆண்டு அவரது உறவினர் மூலம் பூஜா ஜெயின் (39) அறிமுகமாகியுள்ளார். தனியார் வங்கிகளில் ரிலேஷன்ஷிப் மேனேஜராக பணியாற்றிய அனுபவம் கொண்ட பூஜா ஜெயின், ‘ஐ.பி.எல். பண்ட்’ என்ற திட்டத்தில் முதலீடு செய்தால் 30 சதவீதம் கூடுதல் வட்டி கிடைக்கும் என ஹேமாவிடம் தெரிவித்துள்ளார். இதனை நம்பிய ஹேமா, முதற்கட்டமாக ரூ.15 லட்சத்தை முதலீடு செய்துள்ளார். அதற்கான வட்டி தொகையும் அவருக்கு கிடைத்துள்ளது. இதையடுத்து சில மாதங்களுக்குப் பிறகு மேலும் முதலீடு செய்யுமாறு பூஜா ஜெயின் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து 2025-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஹேமா மேலும் ரூ.8 லட்சத்தை முதலீடு செய்துள்ளார். ஆனால், இந்த முறை அவருக்கு எந்தவிதமான வட்டித் தொகையும் கிடைக்கவில்லை. இதுகுறித்து பூஜா ஜெயினிடம் ஹேமா கேட்டபோது, முதலீடு செய்யப்பட்ட நிறுவனம் நஷ்டத்தில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த ஹேமா, தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்து சென்னை மேற்கு மண்டல சைபர்கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, பூஜா ஜெயின் ஏற்கனவே தனியார் வங்கிகளில் பணியாற்றிய அனுபவத்தை பயன்படுத்தி வாடிக்கையாளர்களின் தகவல்களை சேகரித்தது தெரியவந்தது. மேலும், ‘இந்தியா பாண்ட்ஸ் லிமிடெட்’ என்ற பெயரில் போலியான இணையதளத்தை உருவாக்கியிருந்ததாகவும், முதலீட்டாளர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்த ‘ஐ.பி.எல். அன்ட் கோ’ என்ற பெயரில் போலி நடப்புக் கணக்கு ஒன்றைத் தொடங்கியிருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. முதலீட்டாளர்களிடம் இருந்து பெறப்பட்ட பணத்தை அந்தக் கணக்கில் செலுத்தி, பின்னர் தனது சொந்த வங்கிக் கணக்குக்கு மாற்றியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சென்னை பார்க் டவுன், மின்ட் தெருவைச் சேர்ந்த பூஜா ஜெயினை போலீசார் கைது செய்தனர். மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட 2 செல்போன்கள் மற்றும் ஒரு லேப்டாப் ஆகியவற்றையும் அவரிடமிருந்து பறிமுதல் செய்தனர். மேலும், பூஜா ஜெயின் மீது நுங்கம்பாக்கம், கொளத்தூர் காவல் நிலையங்கள் மற்றும் சென்னை மத்திய குற்றப்பிரிவில் ஏற்கனவே மோசடி வழக்குகள் நிலுவையில் இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர். இந்த மோசடி வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை கண்டறியும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.