திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், அரசியல் மற்றும் கருத்தியல் சார்ந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கலாம் என்றும், ஆனால் வீட்டில் இருந்துகொண்டு வாய்க்கு வந்தபடி பேசுவதை அரசியலாக கருத முடியாது என்றும் தெரிவித்தார். இதுபோன்ற கருத்துகளுக்கெல்லாம் பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் கூறினார். முதல்-அமைச்சர் விஜய் தெளிவான முறையில் ஆட்சி நிர்வாகத்தை மேற்கொண்டு வருவதாகவும், அனைவரும் பாராட்டும் வகையில் நிர்வாகம் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார். உலக அளவில் விளையாட்டுத் துறையில் தமிழர்கள் சாதிக்க வேண்டும் என்பதே முதல்-அமைச்சரின் விருப்பம் என்றும் அவர் கூறினார். எதிர்ப்புக்காக சிலர் எதை வேண்டுமானாலும் பேசுவார்கள் என்றும், அதனால்தான் அதிமுகவினர் எதிர்க்கட்சியாகக்கூட அமர முடியாத நிலைக்கு சென்றுள்ளனர் என்றும் அமைச்சர் விமர்சித்தார். ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை நடத்துவது ஜனநாயக உரிமை என்றும், அதை யாரும் தடுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார். ஆனால், அவதூறான, ஆபாசமான மற்றும் கீழ்த்தரமான வார்த்தைகளை பயன்படுத்திப் பேசுவதையே தாங்கள் எதிர்ப்பதாக கூறினார். திமுகவினரின் பேச்சு தொடர்பாகவும் அவர் கடுமையாக விமர்சனம் முன்வைத்தார். திமுகவின் முன்னாள் அமைச்சர்கள் இதே பாணியில் வளர்ந்தவர்கள் என்றும் அவர் குற்றம்சாட்டினார். மேலும், முன்னாள் கொளத்தூர் எம்.எல்.ஏ. மு.க.ஸ்டாலின் தனது மகனையே முறையாக வளர்க்கவில்லை என்றும், அப்படிப்பட்ட நிலையில் அவர் கட்சியை ஒழுங்காக நடத்துவார் என எதிர்பார்க்க முடியாது என்றும் அமைச்சர் ரமேஷ் சாடினார். மின்வெட்டு பிரச்சினை சரிசெய்யப்பட்டுவிட்டதாக மின்துறை அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளதாகவும், தமிழ்நாட்டில் தற்போது எங்கும் மின்வெட்டு இல்லை என்றும் அவர் தெரிவித்தார். மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், மின்வெட்டு இருப்பதாக அரசியல் செய்வதற்காக சிலர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவதாகவும் கூறினார். அரசியல் ஆதாயத்துக்காக முன்வைக்கப்படும் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார்.