பெருந்தலைவர் காமராஜரின் நினைவு நாளையொட்டி, முதல்-அமைச்சர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் அவருக்கு புகழ் வணக்கம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், எளிமையான வாழ்க்கை மற்றும் நேர்மையான நிர்வாகத்தின் மூலம் தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்றவர் காமராஜர் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், கிராமங்கள் தோறும் பள்ளிகளைத் தொடங்கியதுடன், மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தி கல்வி வளர்ச்சிக்கு முக்கிய அடித்தளத்தை அமைத்ததாகவும் விஜய் தெரிவித்துள்ளார். அதேபோல், பல பொதுத்துறை நிறுவனங்கள், அணைகள் மற்றும் நீர்ப்பாசனத் திட்டங்களை உருவாக்கி தொழில் மற்றும் வேளாண் துறைகளின் வளர்ச்சிக்கும் காமராஜர் பங்களித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். தன்னலமற்ற பொதுச்சேவைக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த கர்மவீரர் காமராஜரின் தியாகத்தை நினைவுகூர்வதுடன், அவர் காட்டிய நல்ல பாதையில் தொடர்ந்து பயணிப்போம் என்றும் முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.