பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்: மாணிக்கம் தாகூர் பாராட்டு
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
22 Sep 2026, செவ்வாய் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 22 Sep 2026, Tuesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்: மாணிக்கம் தாகூர் பாராட்டு

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்: மாணிக்கம் தாகூர் பாராட்டு

காங்கிரஸ் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஏழை குடும்பங்களைச் சேர்ந்த பெற்றோர், தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்குப் பதிலாக குடும்ப வருமானத்திற்காக கூலி வேலைக்கு அனுப்பும் நிலை இருந்தது. இதனை மாற்றும் நோக்கில், 1956-57-ம் கல்வியாண்டில் அப்போதைய முதல்-அமைச்சர் காமராஜர் மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அப்போது பேசிய காமராஜர், கல்வி மூலமாகவே ஏழை மற்றும் பின்தங்கிய குழந்தைகளின் அறிவும் திறமையும் வளர்ந்து, அவர்களின் வாழ்க்கை முன்னேறும் என வலியுறுத்தினார். பள்ளிகள் இல்லாத பகுதிகளில் கல்வியை கொண்டு செல்ல வேண்டும் என்றும், அனைவருக்கும் கல்வி கிடைக்கும் வகையில் அதை இலவசமாக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், பசியுடன் இருக்கும் குழந்தைகளுக்கு கல்வி கற்பிப்பது சிரமம் என்பதால், பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதன் மூலம் அவர்களின் சேர்க்கையை அதிகரித்து கல்வியில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றும் காமராஜர் தெரிவித்திருந்தார். இத்திட்டம் வெற்றி பெறுவதற்காக தேவையான பணிகளில் முழுமையாக ஈடுபடத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார். காமராஜர் செயல்படுத்திய மதிய உணவுத் திட்டத்தை பாராட்டிய தந்தை பெரியார், அவரை ‘பகல் உணவு தந்த பகலவன்’ எனப் புகழ்ந்தார். இதன் தொடர்ச்சியாகவே தமிழ்நாட்டில் இலவசக் கல்வி மற்றும் மதிய உணவுத் திட்டம் விரிவடைந்ததாக மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். காமராஜர் கொண்டு வந்த மதிய உணவுத் திட்டம் பின்னர் விரிவுபடுத்தப்பட்டது. தமிழக அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் 19.34 லட்சம் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வந்தது. தற்போது இந்தத் திட்டம் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகம் முழுவதும் உள்ள 15,910 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 15.30 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள். இதற்காக நடப்பு நிதியாண்டில் கூடுதலாக ரூ.217 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. த.வெ.க.வின் கொள்கைத் தலைவராக ஏற்றுக்கொண்டு, திட்டத்துக்கு ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்’ என பெயர் சூட்டியதற்காக தமிழக முதல்-அமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கு நன்றி தெரிவிப்பதாகவும், தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் இந்தத் திட்டத்தை மனதார வாழ்த்தி பாராட்டுவதாகவும் மாணிக்கம் தாகூர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.