கோயம்புத்தூர் பெரியார் அறிவுலகம் நூலகத்தில் புத்தகங்கள் வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்துள்ள புகார்கள் அதிர்ச்சியளிப்பதாகக் கூறியுள்ள 'வீ த லீடர்ஸ்' அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை, மக்கள் வரிப்பணத்தில் முறைகேடு நடைபெற்றிருந்தால் அது அடுத்த தலைமுறையின் கல்வி மற்றும் அறிவு வளர்ச்சிக்கு இழைக்கப்படும் துரோகம் எனத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோயம்புத்தூரில் உள்ள பெரியார் அறிவுலகம் நூலகத்திற்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. நூலகம் என்பது வெறும் கட்டிடம் மட்டுமல்ல. வீட்டில் புத்தகங்களை வாங்கிப் படிக்க வசதியில்லாத மாணவர்கள் முதல் TNPSC உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் லட்சக்கணக்கான இளைஞர்கள் வரை அனைவருக்கும் அறிவையும் வாய்ப்புகளையும் சமமாக வழங்கும் முக்கியமான பொதுச் சொத்தாகும். அத்தகைய நூலகத்திற்காக ஒதுக்கப்படும் மக்கள் வரிப்பணத்தில் முறைகேடு நடந்திருந்தால், அது நிதி மோசடி என்பதைக் கடந்து, எதிர்காலத் தலைமுறையின் கல்வி மற்றும் அறிவு வளர்ச்சிக்கு இழைக்கப்படும் துரோகமாகும். கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் பெரியார் அறிவுலகம் நூலகத்திற்குப் புத்தகங்களைத் தேர்வு செய்ய அமைக்கப்பட்ட குழு பரிந்துரைத்த நூல்களின் முழுப் பட்டியல் என்ன? அதில் இடம்பெற்ற அனைத்து புத்தகங்களும் உண்மையில் வாங்கப்பட்டனவா? கொள்முதல் செய்யப்பட்ட நூல்களின் எண்ணிக்கை, ISBN எண்கள், வாங்கப்பட்ட தேதி மற்றும் நூலகத்தைச் சென்றடைந்த தேதி ஆகியவற்றைச் சரிபார்த்தவர்கள் யார்? மேலும், புத்தகங்களின் தரம், உள்ளடக்கம், விலை ஆகியவற்றை மதிப்பீடு செய்ய என்ன நடைமுறை பின்பற்றப்பட்டது? இத்தகைய கேள்விகளுக்கு உரிய ஆவணங்களுடன் பதிலளிக்க வேண்டும். புத்தகக் கொள்முதல் தொடர்பான பரிந்துரைக் குழுவின் அறிக்கை, பரிந்துரைக்கப்பட்ட நூல்களின் பட்டியல், கொள்முதல் ஆணைகள், விலைப்பட்டியல்கள், விநியோக ஆவணங்கள் மற்றும் சரிபார்ப்புக் குழுவின் அறிக்கை உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்பட வேண்டும். ஒவ்வொரு புத்தகமும் உரிய விலையில் வாங்கப்பட்டதா, கொள்முதல் செய்யப்பட்ட அனைத்து நூல்களும் நூலகத்தை வந்தடைந்தனவா என்பதைக் கண்டறிய சுதந்திரமான, விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். அறிவைப் பகிர வேண்டிய நூலகமே ஊழலுக்கான இடமாக மாற்றப்பட்டிருந்தால், அது மக்கள் வரிப்பணத்தைச் சுரண்டும் செயல் மட்டுமல்ல; அறிவையும் கொள்ளையடிக்கும் செயலாகும். இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். இவ்வாறு அண்ணாமலை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.